Enable Javscript for better performance
இயற்கை பேரிடர் முன்னேற்பாடு ஆலோசனைக் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக ஊராட்சி மன்றக் கூட்ட அரங்கில், வடகிழக்குப் பருவமழை காலத்தில் இயற்கை பேரிடர் ஏற்பட்டால், அதனை எதிர்கொள்வதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்துத் துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
    இக் கூட்டத்துக்கு தலைமை வகித்து ஆட்சியர் பேசியதாவது: மாவட்டத்தில் உளள நீர்நிலை புறம்போக்கு இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை ஆய்வு செய்து உடனடியாக அகற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். வரத்துக் கால்வாய்கள் மற்றும் கண்மாய்களை சீரமைக்கும் பணிக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். மழைநீரை வீணாக்காமல் சேமிக்க ஏதுவாக 5131 பண்ணைக் குட்டைகள் அமைத்திட திட்டமிடப்பட்டு, தற்போது 3750 பண்ணைக் குட்டைகள் அமைக்கப்பட்டுள்ளன.
    கண்மாய் மற்றும் குளங்களின் கரைகளை ஆய்வு செய்வதுடன், மழைக் காலத்தில் கரைகளில் உடைப்பு உண்டாகி வெள்ளம் ஏற்படும் சூழ்நிலையில், அதனைத் தடுப்பதற்கு தேவையான அளவு மணல் மூட்டைகளை தயார் நிலையில் வைத்திட வேண்டும்.
    பேரிடர் காலங்களில், மின்விநியோகத் தடங்களில் ஏற்படும் பாதிப்புகளை உடனடியாகச் சீர்செய்வதற்கு தயார் நிலையில் இருந்திட வேண்டும்.
    உணவு தானியங்கள், காய்கறிகள், பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் போதிய அளவு இருப்பு வைக்கவேண்டும்.
    பள்ளிகளை கணக்கெடுத்து தயார்படுத்தி வைக்கவேண்டும். பேரிடர் மற்றும் அவசர காலங்களில் மேற்கொள்ள வேண்டிய தற்காப்பு மற்றும் பாதுகாப்பு செயல்முறை ஒத்திகையை வட்டாரம் வாரியாகவும் நடத்திட வேண்டும். அதேபோல், சாலைப் போக்குவரத்து பாதிப்பை துரிதமாக சீர்செய்திட தயார் நிலையில் இருந்திட வேண்டும்.
    அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் அவசர காலத்துக்குத் தேவையான அளவு மருந்து, மாத்திரைகள் இருப்பு வைப்பதுடன், தொற்று நோய் பரவாமல் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
    மாவட்டத்தில் ஏதேனும் பேரிடர் ஏற்படும் பட்சத்தில், அதனை போர்க்கால அடிப்படையில் எதிர்கொள்வதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அனைத்துத் துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து மேற்கொண்டு, தயார் நிலையில் இருநதிட வேண்டும் எனவும் ஆட்சியர் கேட்டுக்கொண்டார்.
    கூட்டத்தில், ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அதிகாரி மு. அலி அக்பர், ராமநாதபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன், பரமக்குடி சார்-ஆட்சியர் சு. சமீரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் எஸ்.எஸ். தனபதி என அனைத்துத் துறை அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
    வடகிழக்குப் பருவமழை காரணமாக கால்வாய்களில் உடைப்பு ஏற்பட்டால், அவற்றைத் தடுக்கும் வகையில் அதிகாரிகள் மணல் மூட்டைகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் எஸ். நடராஜன் வெள்ளிக்கிழமை வலியுறுத்தினார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai