புதிய பேருந்து நிலையத்தில் ஆள் நிற்க முடியாதபடி ஆக்கிரமிப்பு!

ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருவதால் பயணிகள் நிற்ககூட இடமில்லாமல் இடநெருக்கடி நிலவுகிறது.
Updated on
1 min read

ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருவதால் பயணிகள் நிற்ககூட இடமில்லாமல் இடநெருக்கடி நிலவுகிறது.
 ராமநாதபுரம் ரயில்நிலையம் எதிரில் பேருந்து நிலையம் செயல்பட்டு வந்தது. இது ரயிலைத் தவறவிட்ட பயணிகளும், ரயிலிலிருந்து இறங்கி வரும் பயணிகளும் பேருந்தில் செல்ல வசதியாக இருந்தது. ஆனால் இங்கு போதுமான இடவசதி இல்லாததால் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது.
 புதிய பேருந்து நிலையமும் ரயில் நிலையத்திற்கு அருகிலேயே இருக்க வேண்டும் எனக் கருதி கால்நடை சந்தையாக இருந்த பகுதியில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது.
 வெவ்வேறு திசைகளில் இருந்து வரும் பேருந்துகள் திரும்பிச் செல்ல வசதியான பகுதியாகவும் அந்த இடம் இருந்தது. ஆனால் பேருந்து நிலையத்தில் நாளுக்குநாள் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருகின்றன. நடைபாதை முழுவதையும் செருப்பு, பழம், பூ விற்பனை செய்யும் சிறு வியாபாரிகள் ஆக்கிரமித்துள்ளனர்.   இதனால் பயணிகள் நிற்கவும், சுமைகளை வைத்துக் கொண்டு வேகமாக நடக்க கூட முடியாத அளவுக்கு ஆக்கமிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  இதுபோதாதென்று, பேருந்து நிலையத்திற்குள் எந்தப் பேருந்தும் திரும்ப முடியாத அளவுக்கு இருசக்கர வாகனங்களையும் பலர் பேருந்து நிலையத்திற்குள் நிறுத்துகின்றனர். இதனால் சட்டம்-ஒழுங்குப் பிரச்னைகளும் அடிக்கடி ஏற்படுகின்றன.
 புதிய பேருந்து நிலைய புறக்காவல் நிலையத்தில் பெரும்பாலும் காவலர்கள் இல்லாமல் பூட்டியே கிடக்கிறது. இலவசக் கழிப்பறை பகுதிக்கே செல்ல முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது. கட்டணக் கழிப்பறை இடிந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ளது. இலவச சிறுநீர் கழிப்பிடங்கள் பல மாதங்களாக சுத்தம் செய்யப்படாமல் உள்ளன.
 புதிய பேருந்து நிலையத்தின் பின்புறம் இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமும் இடநெருக்கடியில் உள்ளது. அதில் மேற்கூரை இல்லாததால் நாள் முழுவதும் வெயிலிலேயே வாகனங்கள் நிற்கின்றன. மழைநீர் வழிந்தோட வழியில்லாததால் மழைநீரும், கழிவு நீரும் தேங்கி நிற்கிறது.
 மாவட்டத்தின் தலைநகருக்கு வரும் வெளிமாநில, வெளிமாவட்ட பயணிகள் முகம் சுளிக்கும் வகையில் உள்ள புதிய பேருந்து நிலையத்தை சீரமைத்து தூய்மைப் படுத்த வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com