பரமக்குடியில் செப்.11 இல் இமானுவேல் சேகரன் நினைவு தினம் அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு அஞ்சலி செலுத்த வாடகை வாகனங்களில் வருவதற்கு அனுமதியில்லை என்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகளை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் எஸ்.நடராஜன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து புதன்கிழமை அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு விவரம்: பரமக்குடியில் இம்மாதம் 11-ஆம் தேதி இமானுவேல் சேகரனின் நினைவு தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.
இது தொடர்பாக அனைத்துத்துறை தலைவர்கள் மற்றும் சமுதாயத் தலைவர்களுடன் சட்டம் ஒழுங்கு முன்னேற்பாடுகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் விவரம்: அஞ்சலி செலுத்த ராமநாதபுரம் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து வருபவர்கள் சொந்த வாகனங்களில் மட்டுமே வர அனுமதிக்கப்படுகிறது. வாடகை வாகனங்களிலோ அல்லது திறந்த வெளி வாகனங்களிலோ வரக்கூடாது. இரு சக்கர வாகனங்கள்,டிராக்டர், கார், சைக்கிள் போன்ற வாகனங்களில் வரக்கூடாது. சொந்த வாகனங்களில் வருவோராக இருந்தால் வாகன எண், வாகனத்தில் பயணம் செய்வோர் விபரங்களை செப். 8 -ஆம் தேதிக்குள் ராமநாதபுரம் எஸ்.பி. அலுவலக தனிப்பிரிவு அலுவலகத்தில் அளித்து வாகன அனுமதிச் சீட்டு பெற்றுக் கொள்ள வேண்டும். இதனை வாகனத்தின் முன்புறத்தில் கண்ணாடியில் ஒட்ட வேண்டும். வாகன அனுமதிச்சீட்டு இல்லாத வாகனங்கள் பரமக்குடி செல்ல அனுமதிக்கப்பட மாட்டாது.
சொந்த வாகனங்களில் வரும் நபர்கள் அந்தந்த மாவட்டங்களில் முறையான அனுமதி பெற்று வருவதுடன் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே நினைவிடத்திற்கு செல்ல வேண்டும். வாகனங்களின் மேற்கூரையில் பயணம் செய்யவோ ஆயுதங்கள் எதுவும் எடுத்துச் செல்லவோ கூடாது. வரும் வழித்தடங்களில் பட்டாசு வெடிப்பதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். வாகனத்தில் ஒலிபெருக்கிகள் பொருத்திச் செல்லக் கூடாது. வாகனங்களில் சாதி,மத உணர்வுகளைத் தூண்டும் வாசகங்கள் அடங்கிய பேனர்களைக் கட்டி வரவோ, கோஷங்களை எழுப்பவோ கூடாது. தலைவர்களுக்கு ஒதுக்கப்பட்ட குறித்த நேரத்தில் அஞ்சலி செலுத்தி விட்டு செல்லவேண்டும். நடைப்பயணமாக அஞ்சலி செலுத்த வரக் கூடாது. பரமக்குடி நகருக்குள் மட்டும் அஞ்சலி செலுத்தி விட்டு அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் நடைபயணமாக செல்லலாம். ஜோதி மற்றும் முளைப்பாரி, பால்க்குடம் ஆகியனவற்றிற்கு அனுமதி இல்லை. நினைவிடத்திலிருந்து சுமார் ஒரு கி.மீ. தூரத்துக்கு மட்டுமே எடுத்து வர அனுமதிக்கப்படும். செப்டம்பர் 11- ஆம் தேதி மட்டும் அவரவர்களது சொந்த ஊரில் ஒலிபெருக்கி இல்லாமல் புகைப்படம் வைத்து, மாலை அணிவித்து மரியாதை செலுத்தலாம். பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சித் தலைவர்களுக்கு மட்டும் அஞ்சலி செலுத்த நேரம் ஒதுக்கீடு செய்யப்படும். இதற்கு ஏதுவாக சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செப்.8 ஆம் தேதிக்கு முன்பாக விண்ணப்பத்தினை அளிக்க வேண்டும்.
வெளிமாவட்ட வாகனங்களுக்கு வழித்தடங்கள்: தூத்துக்குடி,திருநெல்வேலி,விருதுநகர், கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் அருப்புக்கோட்டை, திருச்சுழி,பிடாரி சேரி, பார்த்திபனூர் வழியாக பரமக்குடி வந்து அதே வழியாக திரும்பிச் செல்ல வேண்டும். இவ்வாகனங்கள் கிழக்கு கடற்கரைச் சாலை வழியாக வேம்பார், கன்னிராஜபுரம், சாயல்குடி நோக்கி வரக்கூடாது. சிவகங்கை மாவட்டம் சாலைக்கிராமம்,இளையான்குடியை சேர்ந்த வாகனங்கள் குமாரக்குறிச்சி, காந்தி நகர் வழியாக வரக்கூடாது. பதிலாக அதிகரை விலக்கிலிருந்து மாற்று வழியாக நெடுங்குளம், கிருஷ்ணாபுரம்,முள்ளியேந்தல், மஞ்சள் பட்டிணம், ஆற்றுப்பாலம் வழியாக பரமக்குடி வந்து திரும்பிச் செல்ல வேண்டும். தேவகோட்டையிலிருந்து வருவோர் மறவமங்கலம் வழியாக வரக்கூடாது. மாறாக அந்த வாகனங்கள் சருகனி,காளையார்கோயில்,சிவகங்கை, மானாமதுரை, பார்த்திபனூர் வழியாக வந்து அதே வழியில் திரும்பிச் செல்ல வேண்டும். திருச்சி,புதுக்கோட்டை,தஞ்சாவூர், திருவாரூர் போன்ற இடங்களிலிருந்து வரும் வாகனங்கள் திருப்பத்தூர்,சிவகங்கை, மானாமதுரை,பார்த்திபனூர் வழியாக பரமக்குடி வந்து அதே வழியில் திரும்பிச் செல்ல வேண்டும். மதுரை,திண்டுக்கல்,தேனி மாவட்டங்களில் இருந்து வருவோர் திருப்புவனம்,மானாமதுரை,பார்த்திபனூர் வழியாக பரமக்குடி வந்து திரும்ப வேண்டும். கோயம்புத்தூர்,ஈரோடு,சேலம் மாவட்ட வாகனங்கள் திண்டுக்கல்,மதுரை,மானாமதுரை,பார்த்திபனூர் வழியாக வந்து அதே வழியிலேயே செல்ல வேண்டும்.திருவண்ணாமலை,வேலூர்,கடலூர்,விழுப்புரம் மாவட்ட வாகனங்கள் திருச்சி, சிவகங்கை, மானாமதுரை,பார்த்திபனூர் வழியாக பரமக்குடி வந்து அதே வழியில் திரும்ப வேண்டும் என அச்செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.