ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலுக்குள் பக்தர்கள் ஈரத்துணிகளை போட்டுவிட்டுச்சென்றால் அபராதம் விதிக்கப்படும் என கோயில் இணை ஆணையர் கோ.செ.மங்கையர்கரசி தெரிவித்தார்.
திருக்கோயில் வளாகத்தில் புதன்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
ராமேசுவரம் ராமநாதசுவாமி திருக்கோயிலுக்கு நாள் தோறும் பல்வேறு மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கனக்கான பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். கோயிலுக்கு வரும் பக்தர்கள் அக்னி தீர்த்தக் கரையில் நீராடிய பின் கோயிலுக்குள் உள்ள 22 புனித தீர்த்தங்களில் நீராடி, தாங்கள் அணிந்துள்ள ஈரத்துணியை மாற்றிய பின் சுவாமி, அம்பாளைத் தரிசனம்செய்ய வேண்டும். ஆனால், சில பக்தர்கள் ஈரத்துணியுடன் சுவாமி தரிசனம் செய்கின்றனர்.
இதனால் சன்னதிக்குள் ஈரமாக காணப்படுகின்றது. பக்தர்கள் ஈரத்துணியுடன் தரிசனம் செய்யக்கூடாது. மேலும் உடைமாற்றும் அறையில் ஈரத்துணிகளை போட்டு விட்டு செல்லுகின்றனர். இதனால் கோயிலில் தூய்மை பாதிக்கப்படுகின்றது. இனிமேல் ஈரத்துணியை போட்டுச் சென்றால் ரூ.100 அபராதம் விதிக்கப்படும். மேலும் பக்தர்கள் வசதிக்காக பேருந்து நிலையம் அருகே யாத்திரை நிவாஸ் தங்கும் விடுதி கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றது.
இந்த பணிகள் முடிந்த உடன் கோயிலைச் சுற்றி உள்ள கோவில் நிர்வாகத்திற்கு உள்பட்ட தங்கும் விடுதிகள் அகற்றப்பட்டு, பக்தர்கள் வசதிக்காக கழிவறை, குளியலறை, பாதுகாப்பு பெட்டகம் போன்றவை கட்டப்படும். மேலும் கோயில் நிர்வாகத்திற்கு உள்பட்ட நிலங்களை ஆக்கிரமித்து இருந்தால் அதனைக் கண்டறிந்து மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
பேட்டியின் போது உதவி செயற்பொறியாளர் கே.மயில்வாகனன்,கண்காணிப்பாளர் ம.ககாரின்ராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.