பாம்பனில் புதிதாக நான்கு வழிச்சாலை கடல் பாலம் அமைக்க இரண்டாம் கட்ட மண் ஆய்வுப்பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மதுரையில் ராமேசுவரம் வரையிலான நான்கு வழிச்சாலை திட்டப்பணியில், மதுரையில் இருந்து பரமக்குடி வரையில் முதல் கட்டமாக சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணிகள் முடியும் நிலையில் உள்ளன.
இந்நிலையில், இரண்டாம் கட்டமாக பரமக்குடியில் இருந்து ராமேசுவரம் வரை நான்கு வழி சாலை அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்க உள்ளன. இதற்கான நில எடுப்பு பணிகளை தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். இதில், மண்டபம் முதல் பாம்பன் வரையில் ஏற்கெனவே உள்ள சாலைப்பாலம் இரு வழிச்சாலையாக உள்ளதால் அதற்கு இணையாக புதிதாக 4 வழிச்சாலை கடல் பாலம் அமைக்கப்பட உள்ளது. இந்த பாலத்திற்காக கடலுக்குள் தூண்கள் அமைக்க மண் ஆய்வுப் பணிகள் கடந்த 1 மாதமாக நடைபெற்று வருகின்றன. பாம்பன் மற்றும் மண்டபம் ஆகிய இரு பகுதிகளிலும் கடற்கரையோரம் மற்றும் கடல் பகுதிகளில் இயந்திரம் மூலம் 10 அடி முதல் 30 அடி ஆழம் வரை துளையிட்டு மணல் எடுத்து அதன் தன்மை குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். இதில், இரண்டாம் கட்ட ஆய்வுப் பணிகள் கடந்த திங்கள்கிழமை தொடங்கின. நாள் தோறும் 10 மணி நேரம் வரை இப்பணியை அவர்கள் மேற்கொள்கின்றனர். செவ்வாய்க்கிழமை இப்பணியில் ஏராளமான ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். இந்த ஆய்வில் மணலில் தன்மை குறித்த கண்டறியப்பட்டு அதற்கு ஏற்றவாறு கடலில் தூண்கள் அமைப்பு குறித்து மூத்த பொறியாளர் குழுவினர் ஆய்வு செய்து பணிகளை தொடங்க உள்ளதாக தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறினார்.