கமுதி தாலுகாவில் பூட்டி கிடக்கும் 95 சதவீதம் நூலகங்கள்:  வீணாகும் அரசு நிதி

கமுதி தாலுகாவில் பூட்டியே கிடக்கும் நூலகங்களால் போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.

கமுதி தாலுகாவில் பூட்டியே கிடக்கும் நூலகங்களால் போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். மேலும் பூட்டிக்கிடக்கும் நூலகங்களால் அரசு பணம் ரூ. 10 கோடிக்கு மேல் வீணடிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி தாலுகாவில் உள்ள 53 ஊராட்சிகளில் அமைக்கப்பட்டுள்ள கிளை நூலகங்களில் 95 சதவீதம் நூலகங்கள் 2 ஆண்டுகளாக திறக்கபடாமல் உள்ளதால், இளைஞர்கள், மாணவர்கள் குரூப்-4 உள்ளிட்ட அரசு பணியாளர் தேர்வுகளுக்கு தங்களை தயார்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 
2013-14 ஆம் ஆண்டில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்கீழ் அனைத்து ஊராட்சிகளிலும் ரூ.2.10 லட்சம் மதிப்பீட்டில் நூலகக் கட்டடங்களும், ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் புத்தகங்களும் வழங்கப்பட்டது. இந்த நூலகங்களால் கிராமப் பகுதியிலிருந்து போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்கள், மாணவர்கள் வெளியூர்களுக்கு பயணிக்காமல், சொந்த ஊரிலேயே புத்தகங்களை பெற்று, அரசு, தனியார் பணிகளிலும், மேற்கல்விக்காகவும் பயனடைந்து வந்தனர். ஆனால் தற்போது ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள கமுதி ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட கிராமங்களில் உள்ள நூலகங்கள் 95 சதவீதம் பூட்டியே கிடக்கின்றன. இதனால் போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் நகர்புறங்களிலுள்ள வட்ட, மாவட்ட நூலகங்களுக்கு பயணிக்கும் நிலை உள்ளது. 
இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு தயாராகும் கமுதி பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் கூறியதாவது: கமுதி தாலுகாவில் உள்ள பெரும்பாலான ஊராட்சிகளில் உள்ள நூலகங்கள் நூலகர்கள் இல்லாமல் 2 ஆண்டுகளாக பூட்டியே வைக்கப்பட்டுள்ளது. 
கிராமப்புற மாணவர்களின் நலன் கருதி அமைக்கப்பட்ட இந்த நூலகங்களால் எந்த பயனும் இல்லை. போக்குவரத்து, பேருந்து வசதிகள் இல்லாததால் நகர்புறங்களில் உள்ள நூலகங்களுக்கு சென்று படிப்பதற்கும் சிக்கல் உள்ளது. 
எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு கிராமங்களிலுள்ள நூலகத்தை மீண்டும் திறந்து அனைவரும் பயன்பெறும்வகையில் நூலகர்களை நியமிக்க  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
இதுகுறித்து ஊராட்சிச் செயலர்கள் கூறியதாவது: தற்போது தமிழக நிதி ஆணையத்தில் இருந்து பெறப்படும் நிதி  பெரும்பாலான ஊராட்சிகளுக்கு மாதத்திற்கு ரூ. 1500 மட்டுமே வருகிறது. இதனால் போதுமான நிதி இல்லாததால் நூலகங்களில் தாற்காலிகப் பணியாளர்களை நியமிப்பதில் ஊராட்சி நிர்வாகத்திற்கு சிக்கல் எற்பட்டுள்ளது என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com