Enable Javscript for better performance
ஆழ்கடல் மீன்பிடிப்பில் அரசாணையை நடைமுறைப்படுத்த மனு: மத்திய, மாநில மீன்வளத்துறை செயலர்கள் பதிலளிக்க- Dinamani

சுடச்சுட

    

    ஆழ்கடல் மீன்பிடிப்பில் அரசாணையை நடைமுறைப்படுத்த மனு: மத்திய, மாநில மீன்வளத்துறை செயலர்கள் பதிலளிக்க உத்தரவு

    By DIN  |   Published on : 09th February 2018 02:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆழ்கடல் மீன்பிடிப்பில் அரசாணையில் கூறப்பட்டுள்ள விதிமுறைகளை நடைமுறைப்படுத்த உத்தரவிடக் கோரிய மனுவுக்கு மத்திய, மாநில மீன்வளத் துறைச் செயலர்கள் பதிலளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
      ராமநாதபுரம் மாவட்டம், பாம்பனை சேர்ந்த அருள்,  சலங்கை,  தஞ்சாவூர் மாவட்டம் அதிராமபட்டினத்தை சேர்ந்த முகமது மீராசாகிப்,  புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினத்தை சேர்ந்த நாகூர்பிச்சை ஆகியோர் தாக்கல் செய்த மனு:
       ஆழ்கடலில் மீன் பிடிப்பது தொடர்பாக பல்வேறு விதிகள் ஏற்படுத்தப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த அரசாணையை முறையாக பின்பற்றாமல் இயந்திர படகுகள் மூலம் ஆழ்கடலுக்கு செல்பவர்கள் 24 மணிநேரமும் மீன் பிடித்து வருகின்றனர். சில நேரங்களில் எல்லை தாண்டுகிறார்கள்.  அந்த சமயத்தில் இலங்கை உள்ளிட்ட அண்டை நாடுகளுடன் பிரச்னை ஏற்படுகிறது. மேலும் இரட்டை மடி போன்ற தடை விதிக்கப்பட்ட வலைகள் மூலம் மீன் பிடிக்கின்றனர். இதனால் நாட்டுப் படகு மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். எனவே ஆழ்கடல் மீன்பிடி தொடர்பாக அரசாணையில் கூறப்பட்டு உள்ள வழிகளை நடைமுறைப்படுத்த உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனர்.
      இந்த மனு நீதிபதிகள் எம். சத்தியநாராயணன், ஆர். ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
      மனுவை விசாரித்த நீதிபதிகள்,   மனுவுக்கு மத்திய, மாநில மீன்வளத் துறை செயலர்கள், மீன்வளத் துறை இயக்குநர் ஆகியோர் பதிலளிக்கவும்,  ரோந்துப் பணிகள் குறித்து மண்டபம் கடலோர காவல்படை கண்காணிப்பாளர் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு, விசாரணையை மார்ச் 5-ஆம் தேதிக்கு  ஒத்திவைத்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai