Enable Javscript for better performance
இணையதளம் அடிக்கடி பழுது: தொலைபேசி கட்டணத்தை செலுத்த முடியாமல் வாடிக்கையாளர்கள் அவதி- Dinamani

சுடச்சுட

    

    இணையதளம் அடிக்கடி பழுது: தொலைபேசி கட்டணத்தை செலுத்த முடியாமல் வாடிக்கையாளர்கள் அவதி

    By DIN  |   Published on : 09th February 2018 02:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராமநாதபுரத்தில் தொலைத்தொடர்புத் துறையின் வாடிக்கையாளர் சேவை மையத்தில் இணையதள செயல்பாடு அடிக்கடி பழுதாவதால் தொலைபேசி கட்டணத்தை செலுத்த வரும் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
      ராமநாதபுரம் அரண்மனை அருகில் பாண்டிக்கண்மாய் சாமி தெருவில் தொலை தொடர்புத் துறையின் வாடிக்கையாளர் சேவை மையம் செயல்பட்டு வருகிறது.  இங்கு வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சேவைகைள் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், கடந்த ஓராண்டாகவே இம்மையத்தின் இணையதள செயல்பாடு அடிக்கடி பழுதாகி விடுகிறது. இதனால் மாதாந்திரக் கட்டணம் செலுத்த வருபவர்கள் நீண்ட நேரம் காத்திருந்தும் பணம் செலுத்த முடியாமல் அவதிப்பட்டு திரும்பிச் செல்கின்றனர். 
       சில சமயங்களில் அங்கு பணிபுரியும் ஊழியர்கள் மாதாந்திரக் கட்டணத் தொகையை வாடிக்கையாளர்களிடம் வாங்கி வைத்துக்கொண்டு இணையதள சேவை சரியானவுடன் பணத்தை கட்டி,  உரியவருக்கு தொலைபேசி வாயிலாக தகவல் தெரிவித்து பின்னரே சம்பந்தப்பட்ட  வாடிக்கையாளர் வந்து ரசீதைப் பெற்றுக் கொள்ள வேண்டிய நிலை உள்ளது. இதனால் ஒரு வாடிக்கையாளர் இருமுறை சேவை மையத்தை அணுக வேண்டிய நிலை ஏற்படுகிறது.
         இணைய தள சேவையில் பழுது என ஊழியர்கள் சொல்வதால், வாடிக்கையாளர்கள் அவர்களிடம் தகராறில் ஈடுபடுகின்றனர்.  மேலும் இந்த நிலை ராமநாதபுரம் சேவை மையத்தில் கடந்த ஓராண்டாகவே இருந்து வருவதாகவும் வாடிக்கையாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். சேவை மைய ஊழியர்களோ இணையதளத்தில் தான் குறைபாடே தவிர எங்கள் மீது எந்தக் குறையும்  இல்லை  என்று கூறுகின்றனர். 
    இதுகுறித்து தொலைதொடர்புத்துறையின் உதவிக் கோட்டப் பொறியாளரான பாலகிருஷ்ண மீனாவிடம் கேட்ட போது அவர் கூறியது:
       கணினி பழுது என்றால் உடனடியாக வேறு கணினியை வைத்து பணிகளை செய்யலாம்.  தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இணையம் பழுதானால் எப்படி சரி செய்ய முடியும். இன்று முழுவதும் சர்வர் பழுதாகி விட்டதால் மாதாந்திரக் கட்டணம் செலுத்துவோருக்கு உடனடியாக ரசீது கொடுக்க முடியவில்லை. கட்டணத் தொகையை சிலரிடம் வாங்கி வைத்து இணையதளம் சரியானதும் பணத்தைக் கட்டி ரசீதை பத்திரமாக வைத்திருந்து பல வாடிக்கையாளர்களுக்கு கொடுத்து வருகிறோம் என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai