Enable Javscript for better performance
திருவாடானை அருகே 16-ஆம் நூற்றாண்டு பாண்டியர் கால கல்வெட்டு கண்டெடுப்பு- Dinamani

சுடச்சுட

    

    திருவாடானை அருகே 16-ஆம் நூற்றாண்டு பாண்டியர் கால கல்வெட்டு கண்டெடுப்பு

    By DIN  |   Published on : 09th February 2018 02:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே கள்ளிக்குடியில் 16 -ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டி மன்னர் கால கல்வெட்டு கண்டுபிடிக்கபட்டுள்ளது.
     திருவாடானை அருகில் உள்ள கள்ளிக்குடி சீனிவாசப்பெருமாள் கோயிலில் இக்கல்வெட்டு இடம்பெற்றுள்ளது. கோயிலின் நுழைவாயில் சுவரில் உள்ள கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள அம்சங்கள் குறித்து ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் ராஜகுரு, ஒருங்கிணைப்பாளர் விமல்ராஜ் ஆகியோர் கூறியது:
     கள்ளிக்குடியில் இருக்கும் தீக்கொல்லர் சொக்கர் ஆண்டார் என்பவர் பெருமாள் கோயில் எதிரில் உள்ள குளத்தைத் தானமாக வெட்டிக் கொடுத்ததாக கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. தீக்கொல்லர் என்பது இரும்புக் கொல்லராக இருக்கலாம். திரிபுவனச் சக்கரவத்திகள் ஸ்ரீசீவல்லத்தேவர் எனும் பாண்டிய மன்னரின் 27-ஆவது ஆட்சி ஆண்டில் சார்வரி வருஷம் பங்குனி 1 அன்று இந்த தானம் வழங்கப்பட்டுள்ளது.
    கல்வெட்டின் மேல்பகுதியில் சில வரிகள் அழிந்துள்ளன. இத்தானத்திற்கு யாராவது அழிவு செய்தால் அவர்கள் கங்கைக்கரையிலும் சேதுக்கரையிலும் காராம் பசுவைக் கொன்ற பாவம் எய்துவார்கள் என்றும் திருக்கோயில்களில் திருட்டுப் பாவம் எய்துவார்கள் என்றும் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
    விஜய நகர நாயக்கர் காலக் கல்வெட்டு அமைப்பில் இக்கல்வெட்டு இருக்கிறது. திருப்புல்லாணி அருகில் உள்ள சேதுக்கரை கங்கைக்கரைக்கு இணையாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
    இவ்வூரைச் சேர்ந்த பெரிய நாயன் குலசேகரக் கொல்லன் என்பவர் அரசாங்க அதிகாரியான முதலிகள் சொல்லியபடி இதை எழுதி கையெழுத்திட்டுள்ளார். கல்வெட்டின் காலம் கி.பி.1541 எனக் கணிக்கமுடிகிறது. திருவாடானை பாண்டியர் மன்னரின் 27 -ஆவது ஆட்சியாண்டில் தானம் வழங்கப்பட்டுள்ளதாகக் கல்வெட்டு குறிப்பிடுகிறது. 
    இதன்மூலம் இவர் 27 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சி செய்துள்ளார் என அறியமுடிகிறது. ஆனால் இதே பெயரில் தென்காசியைத் தலைமையிடமாகக் கொண்டு ஆண்ட ஸ்ரீவல்லப பாண்டியன் 9 ஆண்டுகள் தான் ஆட்சி செய்துள்ளார். எனவே இக்கல்வெட்டு குறிப்பிடும் மன்னர் 
    தென்காசியைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட பாண்டியன் இல்லை என்பதை அறியலாம். மேலும் சிவகங்கை ராமநாதபுரம் மாவட்டங்களில் ஏற்கெனவே கண்டுபிடிக்கப்பட்ட சில கல்வெட்டுகளிலும் பாண்டிய மன்னர் பெயர், ஆட்சியாண்டில் குழப்பம் உள்ளது. எனவே தென்காசியைப் போல திருவாடானை அல்லது காளையார்கோயில் பகுதியை தலைமை இடமாகக் கொண்டும் பாண்டியர்கள் ஆட்சி செய்திருக்கலாம் என ஊகிக்கமுடிகிறது என்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai