Enable Javscript for better performance
காவல்துறையின் நன்னடத்தை சான்றிதழ் கிடைப்பதில் தாமதம்: வெளிநாடு செல்வோர் அவதி- Dinamani

சுடச்சுட

    

    காவல்துறையின் நன்னடத்தை சான்றிதழ் கிடைப்பதில் தாமதம்: வெளிநாடு  செல்வோர் அவதி

    By DIN  |   Published on : 31st March 2018 01:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    துபை, சவூதி உள்ளிட்ட அரபு நாடுகளுக்கு வேலை தேடி செல்வோர் காவல்துறையின் நன்னடத்தைச் சான்றிதழை உடனடியாக பெறமுடியாமல் காலதாமதம் ஆவதால் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
    ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து ஆண்டுக்கு சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பணி செய்வதற்காக  வாழ்வாதாரம் தேடி வெளிநாடுகளுக்கு செல்வது வழக்கமாக இருந்து வருகிறது.
    இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் துபை, சவூதி உள்ளிட்ட அரபு நாடுகளுக்கு வேலைக்கு செல்வோர் தங்கள் மாவட்டத்தில் உள்ள மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் நன்னடத்தைச் சான்றிதழ் பெற்று அதை சமர்ப்பித்தால் மட்டுமே வெளிநாடுகளில் அனுமதிக்க முடியும் என்றும் புதிதாக சட்டம் இயற்றப்பட்டது.    வெளிநாடுகளுக்கு செல்வோர் காவல்துறையின் நன்னடத்தைச் சான்றிதழ் இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்பதால் தினசரி ஏராளமானோர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு வருவது வாடிக்கையாக உள்ளது. காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இதற்கென தொடங்கப்பட்ட பிரிவில் ரசீது ஒன்று பெற்று, அந்த ரசீதை பூர்த்தி செய்து அதனுடன் ரூ.  ஆயிரம் ஸ்டேட் வங்கியில் செலுத்தி, அந்த ரசீதை மீண்டும் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். பின்னர் சம்பந்தப்பட்ட மனுதாரரின் விண்ணப்பம் அவர் வசித்து வரும் இடத்துக்கு அருகில் உள்ள காவல் நிலையங்களுக்கு விசாரணைக்கு அனுப்பிவைக்கப்படும்.  
    பின்னர் மீண்டும் அவ்விண்ணப்பம் காவல் கண்காணிப்பாளரின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள உளவுப் பிரிவுக்கு அனுப்பி அங்கும் விசாரணை செய்யப்பட்டு, மீண்டும் காவல் கண்காணிப்பாளருக்கு அனுப்பிவைக்கப்படுகிறது. 
    இரு விசாரணைகளும் முடித்து நன்னடத்தைச் சான்றிதழ் வழங்கக் கூடிய காவல்துறையின் அமைச்சுப் பணியாளர் காவல் கண்காணிப்பாளரிடம் கையெழுத்து பெற்று அதன் பின்னரே நன்னடத்தை சான்றிதழ் மனுதாரர்களுக்கு வழங்கப்படுவது வழக்கமாக இருந்து வரும் நடைமுறை. இதனால் நன்னடத்தை சான்றிதழ் பெற விண்ணப்பித்த ஒவ்வொருவரும் குறைந்தது 50 நாள்கள் வரை காத்திருக்கும் நிலை உள்ளது.  
    விசாரணை முடிந்து நன்னடத்தைச் சான்றிதழ் கைக்கு கிடைக்கும்போது விண்ணப்பித்த நபரின் வெளிநாடு செல்வோருக்கான விசாவின் காலம் முடிந்து விடுகிறது என்பது பலரின் ஆதங்கம்.
    இந்த காலதாமதம் காரணமாக வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்வோருக்கான உத்தரவு சில சமயங்களில் வேறு நபர்களுக்கு மாற்றமும் ஆகி விடுகிறது. மேலும் இச்சான்றிதழுக்கு விண்ணப்பித்தவர்கள் காவல் நிலையங்களுக்கும், காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கும் அலைந்து திரிய வேண்டிய சூழ்நிலையும் ஏற்படுகிறது.
    எனவே வீண் அலைச்சலையும், காலதாமதத்தையும் தவிர்க்கும் வகையில் காவல்துறை உயர் அதிகாரிகள் இவ்விண்ணப்பங்களை உடனடியாக விசாரணைக்கு உட்படுத்தி உடனுக்குடன் கிடைக்கும் வகையில் மாற்று ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என பொதுமக்கள் பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.
    இதுகுறித்து கீழக்கரை சின்னக்கடைத் தெருவில் உள்ள மக்கள் நலக்குழுவின் தலைவர் அப்துல்காதர் கூறியது: அரபு நாடுகளின் புதிய சட்டத்தால் காவல்துறையினரிடமிருந்து நன்னடத்தைச் சான்றிதழ் பெற 45 நாட்களுக்கும் மேலாகிறது. 
    விண்ணப்பம் அளித்தவரை பற்றி முதலில் காவல் நிலையத்திலும், பின்னர் உளவுப் பிரிவு விசாரணை காரணமாகவும் தாமதமாகிறது. இதனால் ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு காவல்நிலையங்களுக்கு அலைந்து கொண்டிருக்கின்றனர். அரசு விடுமுறை நாட்களும் காலதாமதத்துக்கு முக்கிய காரணமாகவும் உள்ளது. ஆனால்,  கேரள மாநிலத்தில் விண்ணப்பித்த 10 நாட்களில் விசாரணை முடிக்கப்பட்டு உடனுக்குடன் நன்னடத்தைச் சான்றிதழ் வழங்கப்படுகிறது என்றார்.
    இதுகுறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறியது: சான்றிதழுக்காக விண்ணப்பித்தவர் மீது குற்ற வழக்குகள் இருக்கிறதா என விரிவாக விசாரணை நடத்திய பிறகே சான்றிதழ் வழங்க முடியும். அடிக்கடி குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் இந்தியாவிலிருந்து தப்பித்து வெளிநாடுகளுக்கு சென்று தலைமறைவாக வாழ முற்படுவதுடன், அங்கும் குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர். 
    அதனால் இரு நாடுகளின் நன்மையையும் கருத்தில் கொண்டு ரகசிய விசாரணை செய்த பிறகே சான்றிதழ் வழங்கப்படுகிறது. விண்ணப்பதாரர்களுக்கு தாமதம் இல்லாமல் சான்றிதழ் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai