Enable Javscript for better performance
சவூதியில் கப்பல் மோதி உயிரிழந்த மீனவரின் உடல்: 3 மாதத்துக்குப் பிறகு பாம்பனில் அடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    சவூதியில் கப்பல் மோதி உயிரிழந்த மீனவரின் உடல்: 3 மாதத்துக்குப் பிறகு பாம்பனில் அடக்கம்

    By DIN  |   Published on : 31st March 2018 01:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சவூதியில் மீன்பிடிக்கச் சென்றபோது கப்பல் மோதி உயரிழந்த ராமேசுவரம் பகுதி மீனவர் உடல், சொந்த ஊரான பாம்பன் கொண்டு வரப்பட்டு வெள்ளிக்கிழமை இறுதிச் சடங்கு நடைபெற்றது.
    ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் பிரன்சிஸ் நகர் பகுதியைச் சேர்ந்த மீனவர் ஜஸ்டீன். இவரது மகன் பிரவீண் லொயலா (21). இவர், 3 மாதங்களுக்கு முன் ஒப்பந்த அடிப்படையில் மீன்பிடிக்க சவூதிஅரேபியாவுக்குச் சென்று, அங்கு மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 1.12.2017 இல் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அவ்வழியே வந்த எண்ணெய் கப்பல் மீன்பிடி படகு மீது மோதியதில், படகிலிருந்த 4 மீனவர்களும் தூக்கி வீசப்பட்டுள்ளனர். அப்போது, அப்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் 3 பேரை மட்டும் மீட்டுள்ளனர். இதில், பிரவீண் லொயலா மட்டும் உயிரிழந்து விட்டதாக, சக மீனவர்கள் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.  அதையடுத்து, குடும்பத்தினர் உயிரிழந்த மகனின் உடலைக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கவேண்டும், ஒப்பந்த அடிப்படையில் அழைத்துச் சென்ற அந்நாட்டு உரிமையாளரிடம் உரிய இழப்பீடு பெற்றுத் தரவேண்டும் என, மாவட்ட ஆட்சியர் மற்றும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். இதனையடுத்து, மத்திய-மாநில அரசுகள் மீனவரின் உடலைக் கொண்டுவர இந்திய தூதரகம் மூலம் நடவடிக்கை மேற்கொண்டன. 3 மாதங்கள் கடந்த நிலையில், சவூதியிலிருந்து மீனவரின் உடல் திருச்சி கொண்டுவரப்பட்டு, அங்கிருந்து சொந்த ஊரான பாம்பனுக்கு வெள்ளிக்கிழமை கொண்டு வரப்பட்டது. உறவினர்கள் இறுதிச் சடங்குக்கு பின், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். பின்னர், பாம்பனில் உடல் அடக்கம் செய்யப்பட்டது. 
    இது குறித்து பாரம்பரிய மீனவ சங்கத் தலைவர் சின்னத்தம்பி கூறியது:  மீனவர் பிரவீண் லொயலா குடும்பத்துக்கு சவூதி அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி, மத்திய அரசு இழப்பீடு பெற்றுத் தரவேண்டும். மேலும், தமிழக அரசு கடலில் உயிரிழந்த மீனவர் குடும்பத்துக்கு வழங்கப்படும் ரூ. 5 லட்சம் நிவாரணத் தொகையை உடனே வழங்கிட வேண்டும் என்றார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai