Enable Javscript for better performance
ராமநாதபுரத்தில் பாஜக பிரமுகர் தாக்கப்பட்ட சம்பவம்: குற்றவாளிகளைப் பிடிக்க இரு தனிப்படைகள்- Dinamani

சுடச்சுட

    

    ராமநாதபுரத்தில் பாஜக பிரமுகர் தாக்கப்பட்ட சம்பவம்: குற்றவாளிகளைப் பிடிக்க இரு தனிப்படைகள்

    By DIN  |   Published on : 31st March 2018 01:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராமநாதபுரம் அருகே பேராவூரில் பாஜக பிரமுகரைத் தாக்கிய குற்றவாளிகளைப் பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.
    பா.ஜ.க. ராமநாதபுரம் மாவட்டச் செயற்குழு உறுப்பினரான ரா. வீரபாகு (48), ஆட்டோ  ஓட்டுநராகவும் உள்ளார். இவரை, வியாழக்கிழமை இரவு புதிய பேருந்து நிலையத்திலிருந்து பேராவூருக்கு ஆட்டோ தேவைப்படுவதாகக் கூறி இருவர் கடத்திச் சென்று, பேராவூர் அருகேயுள்ள தனியார் பள்ளி பகுதியில் 5 பேர் கொண்ட கும்பல் பயங்கர ஆயுதங்களால் தாக்கியுள்ளது. 
    பலத்த காயமடைந்த அவர், கவலைக்கிடமான நிலையில் மதுரையில் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் தொடர்பாக அவரது மனைவி சுமதி அளித்த புகாரின்பேரில், கேணிக்கரை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வீரபாகுவை யார் கடத்திச் சென்று தாக்கினர், என்ன காரணத்துக்காக தாக்கினார்கள் என்ற விவரம் தெரியவரவில்லை.
    இச்சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்யவேண்டும் என, பா.ஜ.க. நிர்வாகிகள் காவல் துறையினரை வலியுறுத்தி வருகின்றனர்.     
    இது குறித்து ராமநாதபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ் மீனா தெரிவித்தது: சந்தேகத்தின்பேரில், 3 பேரைப்  பிடித்து  விசாரணை நடத்தி  வருகிறோம். ஏ.டி.எஸ்.பி. வெள்ளத்துரை தலைமையில் ஒரு தனிப்படையும், ராமநாதபுரம் டி.எஸ்.பி. நடராஜ் தலைமையில் ஒரு தனிப்படையும் நியமிக்கப்பட்டு, குற்றவாளிகளைத் தீவிரமாக தேடி வருகிறோம் என்றார்.
    மதுரை தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும் விரபாகுவை மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை சந்தித்து நலம் விசாரித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai