புரட்டாசி கடைசி சனி விழா: பெருமாள் கோயில்களில் பக்தர்கள் வழிபாடு

புரட்டாசி கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு ராமநாதபுரம், மானாமதுரை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள

புரட்டாசி கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு ராமநாதபுரம், மானாமதுரை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பெருமாள் கோயில்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
ராமநாதபுரம் அருகேயுள்ள சக்கரவாளநல்லூரில் பெருந்தேவி நாயிகா சமேத ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனைகளும் நடந்தன. பெருமாள் திருப்பதி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 
ராமேசுவரம்: ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் புரட்டாசி கடைசி சனிக்கிழமையையொட்டி தங்க கருட வாகனத்தில் ராமர், சீதை,லெட்சுமணன் மற்றும் அனுமனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதனைத்தொடர்ந்து, ராமநாதசுவாமி கோயில் பேஸ்கார்கள் அண்ணாத்துரை, கலைச்செல்வன் தலைமையில் தனுஷ்கோடிக்கு செல்லும் வழியில் உள்ள கோதண்டராமர் ஆலயத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது.  காலையில் ராமநாதசுவாமி கோயிலில் புறப்பட்ட சுவாமி மாலையில் மீண்டும் கோயிலுக்கு திரும்பியது. இந்த நிகழ்ச்சியில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
மானாமதுரை:  மானாமதுரை வீரழகர் கோயிலில் அதிகாலை நடைதிறக்கப்பட்டு மூலவர் சுந்தரராஜப் பெருமாளுக்கும், சௌந்திரவல்லித் தாயாருக்கும் திருமஞ்சனம் நடைபெற்று வெள்ளிக்கவசம் அலங்காரம் செய்யப்பட்டது. அதன்பின் உற்சவருக்கு திருமஞ்சனம் நடத்தப்பட்டு சுவாமி ஸ்ரீ தேவி பூதேவி சமேதமராய் கோயில் மண்டபத்தில் அலங்காரத்தில் எழுந்தருளினார்.  இதனைத்தொடர்ந்து இக்கோயிலில் உள்ள வீர ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் நடத்தப்பட்டது.  திரளான பக்தர்கள் கோயிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்தனர். 
புரட்சியார் பேட்டையில் அமைந்துள்ள தியாக விநோதப் பெருமாள் கோயிலில் மூலவருக்கும் உற்சவருக்கும் அபிஷேகம் நடத்தப்பட்டு பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார். மேட்டுத்தெரு பகுதியில் அமைந்துள்ள அப்பன் ஸ்ரீனிவாசப் பெருமாள் கோயிலிலும் பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. 
மேலும்  பூர்ண சக்கர விநாயகர் கோயிலில் உள்ள ஆஞ்சநேயர் சன்னதி, வைகை ஆற்றுப்பாலம் அருகேயுள்ள ஜெயவீர ஆஞ்சநேயர் கோயில், பிருந்தாவனம் தெரு ஆஞ்சநேயர் கோயில்களில் சுவாமிக்கு அபிஷேகம் நடத்தி வடை மாலை அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. 
மானாமதுரை அருகே வேம்பத்தூர் கிராமத்திலுள்ள பூமிநீளா பெருமாள் கோயிலில் மூலவருக்கும், உற்சவருக்கும் ஆஞ்சநேயர் சுவாமிக்கும் அபிஷேகம் நடத்தி சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com