மீனவர்களை பாதுகாக்க மத்தியில்  தனி அமைச்சகம் அமைக்க வேண்டும்: தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு வலியுறுத்தல்

மீனவர்களை பாதுகாக்க மத்தியில் தனி அமைச்சகம் அமைக்க வேண்டும் என தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

மீனவர்களை பாதுகாக்க மத்தியில் தனி அமைச்சகம் அமைக்க வேண்டும் என தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் தமிழ்நாடு மீன்பிடி தொழிற் சங்க கூட்டமைப்பு (சிஐடியூ) மாநில நிர்வாகிகள் கூட்டம் சனிக்கிழமை தனியார் மகாலில் நடைபெற்றது.  மாநிலத் தலைவர் ஜி.செலஸ்டின் தலைமை வகித்தார். மாநில நிர்வாகிகள் எஸ்.அந்தோணி கே.எம்.லிங்கம், எஸ்.சுப்பிரமணியன், இரா.லோகநாதன், மாவட்ட செயலாளர் எம்.கருணாமூர்த்தி  முன்னிலை வகித்தனர். மாநில பொதுச் செயலாளர் சி.ஆர்.செந்தில்வேல் கலந்து கொண்டு பேசினார். 
இந்த கூட்டத்தில்,  புயல் வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்கள் வந்தால் உடனடியாக மீனவர்களையும், கடலோர பகுதிகளில் வாழும் மக்களையும்  காப்பாற்ற எவ்வித தகவல் தொழில்நுட்ப கட்டமைப்புகளையும் மேம்படுத்தவில்லை. 
போர்க்கால அடிப்படையில் முன்தயாரிப்பு நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும். டீசல் விலை உயர்வால் மீன்பிடி தொழில் கடும் நெருக்கடியை சந்தித்து வருகிறது. அனைத்து மீன்பிடி படகுகளுக்கும் மானிய விலையில் டீசல் வழங்க வேண்டும். நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அதிகமாக பங்களிப்பு செய்யும் மீன்பிடி தொழிலை சரியான முறையில் மேலாண்மை செய்ய மத்தியில் தனி அமைச்சகம் அமைக்க வேண்டும். 
இலங்கை அரசு தற்போது கொண்டு வந்துள்ள வெளிநாட்டு மீன்பிடி படகுகளை ஒழுங்குபடுத்தும் சட்டத்தின் மூலம் தமிழக மீனவர்கள் பாதிக்கப்படும் நிலை உள்ளது. எனவே இலங்கையுடன் மத்திய அரசு பேச்சு வார்த்தை நடத்தி இந்தச் சட்டத்திலிருந்து தமிழக மீனவர்களை பாதுகாக்க வேண்டும். 
உள்நாட்டு நீர் நிலைகளில் மீன்பிடிக்கும் உரிமையை தனியாருக்கு  கொடுக்காமல் அதை உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 
இக் கூட்டத்தில் சிஐடியூ நிர்வாகிகள் என். பி.செந்தில், என். ஜே.மோகன்தாஸ், ப. வடகொரியா, ஆர். பூமாரி,  எம். செந்தில், ஜி.பாண்டி, கே.ராமர், எம். பிச்சை, என்.மாரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com