11 கிலோ கடல் அட்டை, கடல் குதிரை கடத்திய இளைஞர் கைது
By DIN | Published on : 12th September 2018 05:45 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே தொண்டி கிழக்கு கடற்கரை சாலையில் 11 கிலோ கடல் அட்டை, கடல் குதிரைகளை கடத்திய இளைஞரை வனத்துறையினர் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
தொண்டி கிழக்கு கடற்கரை சாலையில் மணக்குடி அருகே அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவரை, வனச்சரக அலுவலர் சுதாகர் தலைமையிலான காவல் படையினர் சோதனைக்காக தடுத்து நிறுத்த முயன்றனர்.
ஆனால், இருசக்கர வாகனத்தில் வந்தவர் நிற்காமல் சென்றார். அதையடுத்து அவரை வனத்துறையினர் பின்தொடர்ந்து, விரட்டிச் சென்று, தொண்டி அருகே மடக்கிப் பிடித்தனர்.
பின்னர் அவரிடம் விசாரித்ததில், பிடிபட்டவர் தேவிபட்டினத்தைச் சேர்ந்த முகம்மதுஅலி (28) என்பதும், இருசக்கர வாகனத்தில் 11 கிலோ தடைசெய்யப்பட்ட கடல் குதிரை மற்றும் கடல் அட்டையை கடத்திச் சென்றதும் தெரியவந்தது.
அதையடுத்து, அவற்றை பறிமுதல் செய்த வனத்துறையினர், முகம்மது அலியை கைது செய்து, திருவாடானை குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி பாலமுருகன் முன் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி, முகம்மது அலியை 15 நாள் சிறையில் வைக்க உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து அவரை ராமநாதபுரத்தில் உள்ள சிறையில் அடைத்தனர்.