ராமேசுவரம், கமுதி, பரமக்குடியில் விநாயகர் சிலைகள் கரைப்பு

ராமநாதபுரம் மாவட்டம்  ராமேசுவரம், கமுதி, பரமக்குடியில் விநாயகர் சதுர்த்திக்கு வைக்கப்பட்ட சிலைகள்

ராமநாதபுரம் மாவட்டம்  ராமேசுவரம், கமுதி, பரமக்குடியில் விநாயகர் சதுர்த்திக்கு வைக்கப்பட்ட சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு வெள்ளிக்கிழமை கரைக்கப்பட்டன.
ராமேசுவரம், தங்கச்சிமடம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் விநாயகர் சதுர்த்தியையொட்டி இந்து அமைப்புகள் சார்பில் பல்வேறு இடங்களில்  விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.  பின்னர் வெள்ளிக்கிழமை 60 -க்கும் மேற்பட்ட சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அக்னி தீர்த்தம் மற்றும் அப்பகுதிகளில் உள்ள நீர் நிலைகளில் வெள்ளிக்கிழமை கரைக்கப்பட்டன. இதையொட்டி ராமேசுவரத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டிருந்தது.
கமுதி: கமுதியை அடுத்துள்ள ராமசாமிபட்டியில் விநாயகர் சதுர்த்தி விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி ஊரின் மையப் பகுதியில் அமைக்கப்பட்ட 6 அடி உயர விநாயகர் சிலை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதனையடுத்து அப்பகுதியில் உள்ள பள்ளி மாணவர்கள், பொதுமக்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கிராமத்தின் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டன. இதைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை  ராமசாமிபட்டி கிராமத்திலிருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ள கோரைப் பள்ளம் அருகே உள்ள கண்மாய்க்கு விநாயகர் சிலை ஊர்வலமாக எடுத்துச் சென்று கரைக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் தென்றல் மாரியப்பன், ராமசாமிபட்டி கிராம மக்கள் செய்தனர்.  
பரமக்குடி: விநாயகர் சதுர்த்தியையொட்டி பரமக்குடி நகர் மற்றும் எமனேசுவரம் பகுதிகளில் இந்து முன்னணி சார்பில்  40 இடங்களில் சுமார் 3 முதல் 10 அடி உயரமுள்ள விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு நடைபெற்றது. பின்னர் வெள்ளிக்கிழமை மாலை நகரில் வைக்கப்பட்டிருந்த அனைத்து சிலைகளும்  அங்குள்ள தியேட்டர் பகுதிக்கு கொண்டு வரப்பட்டு, பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன. 
இதற்கு இந்து முன்னணி நகர் தலைவர் எஸ்.வீரபாண்டியன் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் கே.ஆதித்தன், குமரன், பா.ஜ.க கோட்ட பொறுப்பாளர் கே.சண்முகராஜ், மாநிலச் செயலர் பொன்.பாலகணபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
ஊர்வலத்தை இந்து முன்னணி மாவட்ட பொறுப்பாளர் கே.என்.கங்காதரன் கொடியசைத்து தொடக்கி வைத்தார். பெருமாள் கோயில் படித்துறையை ஊர்வலம் சென்றடைந்தது. அங்கு வைகை ஆற்றில் சிலைகள் அனைத்தும் கரைக்கப்பட்டன.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com