ராமநாதபுரம் மாவட்டத்தில் 7,348 வாக்குச்சாவடி அலுவலர்கள் நியமனம்
By DIN | Published On : 01st April 2019 06:14 AM | Last Updated : 01st April 2019 06:14 AM | அ+அ அ- |

ராமநாதபுரம் மாவட்டத்தில் மக்களவைத் தேர்தல் மற்றும் பரமக்குடி (தனி) சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் பணிகளுக்காக 7,348 வாக்குச்சாவடி அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ் தெரிவித்தார்.
பரமக்குடி (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் தேர்தல் பணியில் ஈடுபடும் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான முதற்கட்ட பயிற்சி முகாம் ஆயிர வைசிய மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த பயிற்சி முகாமினை தேர்தல் பொதுப் பார்வையாளர் ஆனந்த் ஸ்வரூப் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கொ.வீரராகவராவ் பார்வையிட்டார்.
பின்னர் அவர் கூறியது: ராமநாதபுரம் மக்களவைத் தேர்தல் மற்றும் பரமக்குடி (தனி) சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடத்துவதற்கான முன்னேற்பாடு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன்படி மாவட்டத்தில் 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 1,364 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் சாய்வுதள வசதி, குடிநீர் வசதி, கழிப்பறை வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் உறுதி செய்யப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு நாளன்று தேர்தல் பணியில் ஈடுபடுவதற்காக பரமக்குடி சட்டப்பேரவைத் தொகுதியில் 1,615 வாக்குச்சாவடி அலுவலர்களும், திருவாடானை சட்டப்பேரவைத் தொகுதியில் 1,504 வாக்குச்சாவடி அலுவலர்களும், ராமநாதபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் 2,169 வாக்குச்சாவடி அலுவலர்களும், முதுகுளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் 2,060 வாக்குச்சாவடி அலுவலர்களும் என மொத்தம் 7,348 வாக்குச்சாவடி அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு தேர்தல் தொடர்பான முதற்கட்ட பயிற்சியும், வாக்குப் பதிவு இயந்திரம், வாக்குப்பதிவை சரிபார்க்கக்கூடிய இயந்திரம் ஆகியவற்றை கையாளும் முறைகள் குறித்தும் பயிற்சி வழங்கப்பட்டு வருகின்றன.
வாக்குப்பதிவு நாளன்று காலை 7.00 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்குவதற்கு முன்னதாகவே வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடத்தி சான்றொப்பம் பெற வேண்டும். அதே வேளையில் வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்னதாகவே மாதிரி வாக்குப்பதிவு முடிவினை நீக்கி வாக்குப்பதிவிற்கு தயார் செய்ய வேண்டும்.
மேலும் வாக்காளர்களின் வாக்குப்பதிவு குறித்த ரகசியத்தினை பாதுகாக்கும் வகையில், வாக்குச்சாவடி அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன என்றார். உடன் உதவி தேர்தல் அலுவலர்கள் எஸ்.ராமன், கயல்விழி ஆகியோர் இருந்தனர்.