சுடச்சுட

  

  மதத்தை முன்வைத்து பிரசாரம்: தமிழ் பண்பாட்டுக்கு எதிரானது: காதர்மொய்தீன் பேச்சு

  By DIN  |   Published on : 16th April 2019 08:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தேர்தலில் மதத்தை முன்வைத்து மேற்கொள்ளப்படும் பிரசாரமானது தமிழ் பண்பாட்டுக்கு எதிரானது என இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் கே.எம்.காதர்முகைதீன் கூறினார்.
   ராமநாதபுரம்  மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிடும் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் கே.நவாஸ்கனியை ஆதரித்து சந்தைத் திடலில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் அவர்  பேசியதாவது:
  தமிழகத்தில் உள்ள அனைத்து மதத்தவரும் சகோதரர்களாக வாழ்ந்து வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பல அரசியல் கட்சிகளில் இருப்பதைப் போலவே, தமிழால் ஒன்றுபட்ட நாம் வேறு வேறு மதங்களைக் கொண்டுள்ளோம். ஆகவே, தேர்தலில் பதவியைப் பெறுவதற்காக மதத்தை முன்னிலைப்படுத்தி  பிரசாரம் மேற்கொள்வது தமிழ் பண்பாட்டுக்கு எதிரானது. ராமேசுவரம் கோயில் கட்டுவதற்கு ரகுநாதசேதுபதி அமைச்சரவையில் இடம் பெற்ற வள்ளல் சீதக்காதியே காரணம் என்பதை மறந்துவிடக் கூடாது. மதத்தை வைத்து மக்களை வேறுபடுத்துவது சரியல்ல. ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பதே அண்ணாவின் கொள்கை. அதையே திமுகவும், அதன் கூட்டணிக் கட்சிகளும் செயல்படுத்தி வருகின்றன. சமத்துவக் கொள்கையை பாஜகவினரும் புரிந்து செயல்படவேண்டும் என்றார். 
  கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் பொன். முத்துராமலிங்கம், திமுக மாநில மகளிர் அணி துணைத் தலைவர் எம்.எஸ்.கே.பவானிராஜேந்திரன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகிகள் கே.ஏ.எம். முகம்மதுஅபுபக்கர் எம்எல்ஏ, ஏ.ஷாஜகான், மதிமுக நிர்வாகிகள் அழகுசுந்தரம், குணா, காங்கிரஸ் நிர்வாகி தெய்வேந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். திமுக நகரச் செயலர் கார்மேகம் வரவேற்றார். முகம்மது பைசல் நன்றி கூறினார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai