சுடச்சுட

  

  தடைக்காலத்தில் சின்ன ஏர்வாடியில் கேரள மீனவர்கள் மீன் பிடிப்பதாகப் புகார்

  By DIN  |   Published on : 17th April 2019 06:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ராமநாதபுரம் பகுதியில் விசைப்படகுகளுக்கு மீன்பிடித் தடைக்காலம் ஆரம்பித்துள்ள நிலையில்,   சின்ன ஏர்வாடி கடற்கரைப் பகுதிகளில் கேரள மீனவர்கள் மீன் பிடிப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர். 
  இது தொடர்பாக கீழக்கரை பகுதி சின்ன ஏர்வாடியைச் சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் சங்க தலைவர் குணசேகரன், செயலாளர் ஏனஸ்டின் ஆகியோர் தலைமையில் ராமநாதபுரத்தில் உள்ள மீன்வளத்துறை அதிகாரிகளிடம் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனர்.
  அவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பது: தமிழக கடலோர மாவட்டங்களான ராமநாதபுரம், தூத்துக்குடி, புதுக்கோட்டை என 10 மாவட்டங்களில் ஆண்டுதோறும் 60 நாள்கள் மீன்கள் இனப்பெருக்கத்திற்காக மீன்பிடி தடைகாலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
  இந்த காலகட்டத்தில் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்கக் கடலுக்கு செல்ல மாட்டார்கள். அத்துடன் தங்கள் படகுகளில் ஏற்பட்டுள்ள பழுதுகளை சீரமைக்கவும் இக்காலகட்டத்தை மீனவர்கள் பயன்படுத்திக் கொள்வர்.  
    இந்நிலையில் தற்போது சின்ன ஏர்வாடி கடற்கரையில் கேரள மாநிலத்தை சேர்ந்த மீனவர்கள் ஏராளமானோர் விசைப்படகுகளில் இரவு, பகலாக தங்கி  மீன்பிடித்து வருகின்றனர். இதனால் கீழக்கரைப் பகுதி  மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருகிறது. அத்துடன் மீன்களில் இனப்பெருக்கமும் பாதிக்கப்படுகிறது. ஆகவே மீன்பிடி தடைக்காலத்தில் மீன்பிடித்து வரும் கேரள மாநில மீனவர்களை கட்டுப்படுத்த வேண்டியது அவசியம் என மனுவில் தெரிவித்துள்ளனர்.
  இதுகுறித்து மீன்வளத்துறை துணை இயக்குநர் காத்தவராயனிடம் கேட்டபோது, சின்ன ஏர்வாடி பகுதி மீனவர்களின் புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம், தூத்துக்குடி கடலோர காவல்படைக்கு தகவல் கொடுத்துள்ளோம். சின்ன ஏர்வாடிப் பகுதியில்  மீன்வளத்துறை ஆய்வாளர்கள் பைபர் படகுகள் மூலம் கடற்கரை பகுதிகளை ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனர் என்றார்.


   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai