சுடச்சுட

  

  ராமநாதபுரத்தில் வாக்குப்பதிவின் போது 123 வாகனங்களில் போலீஸார் ரோந்து

  By DIN  |   Published on : 17th April 2019 06:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் வியாழக்கிழமை (ஏப்.18) வாக்குப்பதிவின் போது 123 வாகனங்களில் சிறப்பு காவல்படையினர் ரோந்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    ராமநாதபுரத்தில் வாக்குப்பதிவுக்காக 1,916 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குச்சாவடிகளில் 188 இடங்கள் பதற்றமானவை என அடையாளம் காணப்பட்டுள்ளன. வாக்குப்பதிவை அமைதியாக நடத்தும் வகையில் 240 வீரர்கள் கொண்ட 3 பிரிவு துணை ராணுவப் படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
    நவீன வகை துப்பாக்கியுடன் துணை ராணுவப் படையினர்  பதற்றமான வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பை மேற்கொள்வர். இதுதவிர தமிழ்நாடு சிறப்புக்காவல் படை வீரர்கள் 120 பேர் கொண்ட 3 பட்டாலியன்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் ராமநாதபுரம் நகர் மற்றும் ஊரகப் பகுதிகளில் பதற்றமான வாக்ச்சாவடிகளில் பாதுகாப்பை மேற்கொள்ளவுள்ளனர்.
    இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 42 காவல் நிலையங்களில் உள்ள போலீஸார் மற்றும் முன்னாள் ராணுவத்தினர், ஊர்க்காவல்படையினர் ஆகியோரைச் சேர்த்து 1,800 பேர் வரை பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனர். அவர்களுக்கு 123 வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வாகனத்திலும் ஒரு சார்பு ஆய்வாளர் மற்றும் 4 பேர் என 5 பேர் கொண்ட குழுவினர் ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். ரோந்துப் பணியில் ஈடுபடும் ஒவ்வொரு வாகனக் குழுவினரும் குறைந்தது 6 வாக்குச் சாவடிகள் முதல் 10 வாக்குச் சாவடிகள் வரை ரோந்து சென்று கண்காணிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
   மின்வாரிய அலுவலர்கள் ஆலோசனை: ராமநாதபுரம் மாவட்டத்தில் வாக்குப் பதிவு நேரத்தில் மின்தடை ஏற்படாமலிருக்கும் வகையில் மின் வாரிய அதிகாரிகள், அலுவலர்கள் ஆலோசனைக் கூட்டம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.  திடீர் மின்தடை ஏற்பட்டால் அதை உடனடியாக சீரமைக்க, பணியாளர்கள் தயார் நிலையில் இருக்க மின்வாரிய உயர் அதிகாரிகளுக்கு கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.  
  கமுதி: கமுதியில் துணை காவல் கண்காணிப்பாளர் சண்முகசுந்தரம் தலைமையில் , அபிராமம், பெருநாழி, கமுதி காவல் நிலைய ஆய்வாளர்கள் முன்னிலையில் 100 க்கும் மேற்பட்ட துணை ராணுவப் படையினரின் அணிவகுப்பு நடைபெற்றது. கமுதி பேருந்து நிலையத்திலிருந்து தொடங்கி, பேரூராட்சி அலுவலகம், நாடார் பஜார், வெள்ளையாபுரம், வழியாக சிங்கப்புளியாபட்டி கிராமத்தில் முடிவடைந்தது.  பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கவும், அசம்பாவிதங்கள் நடைபெற்றால் அப்பகுதிக்கு விரைந்து சென்று பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதை வாக்காளர்கள் அறியும் வண்ணம் இந்த அணிவகுப்பு நடத்தப்படுவதாக போலீஸார் தெரிவித்தனர்.


   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai