ராமநாதபுரம் மாவட்டத்தில் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் சக்கர நாற்காலி: ஆட்சியர் தகவல்

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 1,367 வாக்குச்சாவடிகளிலும் மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் வாக்களிக்கும்

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 1,367 வாக்குச்சாவடிகளிலும் மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் வாக்களிக்கும் வகையில்  மூன்று சக்கர நாற்காலி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான கொ.வீரராகவராவ் தெரிவித்தார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் மக்களவைத் தேர்தலையொட்டி வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பவுள்ள 158 மூன்று சக்கர நாற்காலிகள் வேளாண்மைக் கூட்டுறவு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வைக்கப்பட்டுள்ளன. இதனை செவ்வாய்க்கிழமை பார்வையிட்ட  ஆட்சியர் செய்தியாளர்களிடம் கூறியது: ராமநாதபுரம் மாவட்டத்தில் 11,590 மாற்றுத்திறனாளிகள் வாக்காளர்களாக உள்ளனர். 
மாற்றுத்திறனாளிகள் மற்றும்  முதியோர் வாக்களிக்கும் வகையில்,  மாவட்ட அளவில் 4 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் உள்ள 1,367 வாக்குச் சாவடிகளில் தலா ஒரு மூன்று சக்கர நாற்காலி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சக்கர நாற்காலியை செயல்படுத்த சேவையாளர் ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளார். 
 வாக்குப்பதிவுக்கான அனைத்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் தயார் நிலையில் உள்ளன. வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும்  தேர்தல் பணியில் ஈடுபடுவோரை புதன்கிழமை (ஏப்.17) அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை மாலையுடன் தேர்தல் பிரசாரம் நிறைவடைந்த நிலையில் விதி மீறுவோரை கண்காணிக்க சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்களிக்க பணம் பட்டுவாடா செய்வோர் குறித்து 1950 என்ற தொலைபேசி எண்ணில் பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம். பணம் விநியோகம் போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். 
வாக்குப்பதிவு அமைதியாக நடைபெறும் வகையில் 792 வாக்குச்சாவடிகளில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பிரசாரம் நிறைவடைந்த நிலையில் வெளியூரைச் சேர்ந்த வாக்காளர்கள் ராமநாதபுரம் தொகுதியில் தங்கி பிரசாரத்தில் ஈடுபடவோ, தேர்தல் பணிகளில் ஈடுபடவோ கூடாது.
 அப்படி விதிமீறி செயல்படுவோரைக் கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com