ராமநாதபுரம் வாக்கு எண்ணும் மையத்தில் கூடுதல் பாதுகாப்பு

ராமநாதபுரம் வாக்கு எண்ணும் மையத்தில் ஏற்கெனவே உள்ள பாதுகாப்புடன் தற்போது கூடுதலாக பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 


ராமநாதபுரம் வாக்கு எண்ணும் மையத்தில் ஏற்கெனவே உள்ள பாதுகாப்புடன் தற்போது கூடுதலாக பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 
ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி மற்றும் பரமக்குடி சட்டப்பேரவைத் தொகுதி ஆகியவற்றுக்கான வாக்குப் பதிவு கடந்த 18 ஆம் தேதி நடைபெற்றது. 
வாக்குப்பதிவு முடிந்ததும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் ராமநாதபுரம்-தேவிபட்டினம் சாலையில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள அறைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் இடம் பெற்றுள்ள 6  சட்டப்பேரவைத் தொகுதிகள் வாரியாக வாக்குப்பதிவு இயந்திரங்கள் 6 அறைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு அவற்றின் கதவுகளில் பூட்டுகள் சீலிடப்பட்டுள்ளன. 
ஒவ்வொரு அறையின் முன்பும் மத்திய துணை ராணுவப் படையினர், தமிழ்நாடு சிறப்பு பாதுகாப்புப் பிரிவினர், மாவட்ட காவல்துறை சிறப்பு அதிரடிப்படையினர் மற்றும் வெடிகுண்டு கண்டறியும் பிரிவினர், தீயணைப்புப் படைப்பிரிவினர் என பல கட்ட பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 
வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள அறைப் பகுதிகளுக்கு பார்வையிடச் செல்லும் அனைத்து அதிகாரிகளும் வெடிகுண்டு சோதனை வாயில் வழியாகவே செல்ல அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். 
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மட்டும் ஏற்கெனவே இருந்ததை விட தற்போது கூடுதலாக போலீஸார் நிறுத்தப்பட்டுள்ளனர். காவல் துணைக் கண்காணிப்பாளர்கள் 3 பேர் 3 ஷிப்ட்களாக வெளிப்புற பாதுகாப்பை கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் தற்போது மொத்தம் 250 போலீஸார் 3 கட்டமாக பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், பல்கலைக்கழக கல்லூரி பிரதான வாயில் முன்பு காவல்துறை கட்டுப்பாட்டு அறையும், அரசியல் கட்சியின் முகவர்கள், வேட்பாளர்கள் அமர்ந்து கண்காணிக்கும் அறையும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 
இரு அறைகளிலும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறைகளில் பொருத்தப்பட்ட கண்காணிப்புக் கேமரா காட்சிகள் தெரியும் வகையில் தொலைக்காட்சிகளும் அமைக்கப்பட்டுள்ளன. பிரதான கட்சிகளைச் சேர்ந்தவர்கள் சுழற்சி முறையில் கண்காணிப்புப் பணியில் தொடர்ந்து ஈடுபட்டுவருகின்றனர். 
தேர்வு பாதிக்காமல் ஏற்பாடு: வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் தற்போது பருவத் தேர்வுகள் நடந்துவருகின்றன. தேர்வெழுதச் செல்லும் மாணவர்கள் அனைவரும் குறிப்பிட்ட வழியில் மட்டுமே சென்று தேர்வு அறைகளை அடையும் வகையில் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com