ராமநாதபுரத்தில் கடல் பசு மீட்புத் திட்ட பயிற்சி தொடக்கம்
By DIN | Published On : 26th April 2019 01:37 AM | Last Updated : 26th April 2019 01:37 AM | அ+அ அ- |

ராமநாதபுரம் மன்னார்வளைகுடா உயிர்க்கோள காப்பக வளாகத்தில் கடல் பசு மீட்புத் திட்டம் தொடர்பான ஐந்து நாள்கள் பயிற்சி வியாழக்கிழமை தொடங்கியது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் மன்னார்வளைகுடா உயிர்க்கோள காப்பகப் பகுதியில் கடல் பசுவைப் பாதுகாக்கும் வகையில் சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் மூலம் கடல் பசு கண்காணிப்பு, கடல் புற்களின் இருப்பு, வளர்ச்சி ஆகியவற்றை கண்காணிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் வனத்துறையினர், மீனவர்கள், கடலோரக் காவல் படையினருக்கு சிறப்பு பயிற்சி வழங்கும் வகையில் இந்த 5 நாள்கள் பயிற்சி தொடங்கப்பட்டுள்ளது. இதில் 5 வனவர்கள், கடலோரக் காவல் படையைச் சேர்ந்த 5 உதவி ஆய்வாளர்கள், 2 மீனவர்கள் என மொத்தம் 12 பேர் கலந்துகொண்டனர். அவர்களுக்கு கடல் பசுப் பாதுகாப்பு கொள்கை குறித்து விளக்கப்பட்டது.
பயிற்சியை கடலோரா பாதுகாப்பு குழும ஏ.டி.ஜி.பி வன்னியப்பெருமாள் தொடங்கி வைத்தார். ராமநாதபுரம் மாவட்ட வனச்சரக உயிரினக் காப்பாளர் டி.கே.அசோக்குமார் பயிற்சியின் நோக்கம் குறித்து விளக்கினார். கடலில் மூழ்கி உயிரினங்களைக் கண்காணிக்கும் முறைகள் குறித்து அரவிந்தன் மற்றும் அவரது குழுவினர் செயல்முறைப் பயிற்சி அளித்தனர்.
பயிற்சியின் இரண்டாம் நாளான வெள்ளிக்கிழமை நீச்சல் குளத்திலும், சனிக்கிழமை கடலோரப் பகுதிகளிலும், இறுதி நாள்களில் கடல் புற்கள் உள்ள இடத்திலும் பயிற்சிகள் அளிக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.