முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்
சூரிய கூடார உலர்த்தி அமைக்க விவசாயிகளுக்கு 60 சதவீதம் மானியம்
By DIN | Published On : 04th August 2019 03:49 AM | Last Updated : 04th August 2019 03:49 AM | அ+அ அ- |

ராமநாதபுரம் மாவட்டத்தில் சூரிய கூடார உலர்த்தி அமைக்க விவசாயிகளுக்கு 60 சதவீத மானியம் அளிக்கப்பட உள்ளதால், அவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகச் செய்திக் குறிப்பு விவரம்: அறுவடை செய்த விவசாய விளைபொருள்களை உலர்த்துவதற்கு உதவும் சூரிய கூடார உலர்த்தி அமைக்க, விவசாயிகளுக்கு தமிழக அரசு வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் 60 சதவீதம் மானியம் வழங்குகிறது. விளைபொருள்களை மண் தரை அல்லது சாலையில் காய வைத்தால், அதன் தரம் குறைகிறது. மேலும், கல், மண் மற்றும் தேவையற்ற பிற பொருள்கள் கலந்துவிடுகின்றன. எனவே, சூரிய கூடார உலர்த்தியில் காயவைப்பதால் தரம் கூடுவதோடு மட்டுமல்லாமல், சந்தையில் அதன் மதிப்பும் கூடுகிறது.
அதேநேரம், கூடார வெப்பத்தில் குறைந்த நேரத்தில் காய்ந்து விடுவதுடன், காற்று மற்றும் மழையிலிருந்தும் பாதுகாப்பு கிடைக்கிறது.
இந்த கூடாரத்தை 400 சதுர அடி முதல் 1000 சதுர அடி பரப்பளவு வரை அமைக்கலாம். சூரிய உலர்த்தி கூடாரத்தை அமைக்க அதிகபட்சமாக ரூ.3.50 லட்சம் மானியமாக வழங்கப்படுகிறது.
விருப்பமுள்ள விவசாயிகள், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள வேளாண்மைப் பொறியியல் துறை செயற்பொறியாளர் அலுவலகம் (செல்லிடப்பேசி - 94433-23374) அல்லது ராமநாதபுரம் மாவட்டக் கருவூலக கட்டட முதல் தளத்தில் உள்ள உதவிச் செயற் பொறியாளர் அலுவலகம் (செல்லிடப்பேசி- 96553-04160) அல்லது பரமக்குடி கொல்லம்பட்டறை தெருவில் உள்ள உதவிச் செயற் பொறியாளர்அலுவலகம் (செல்லிடப்பேசி- 95005-09329) ஆகியவற்றில் பட்டா நகல், அடங்கல் மற்றும் புல வரைபட நகல் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்கலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.