முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்
பலாத்கார சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவிக்கு மர்மநபர்கள் மிரட்டல்
By DIN | Published On : 04th August 2019 03:48 AM | Last Updated : 04th August 2019 03:48 AM | அ+அ அ- |

ராமநாதபுரத்தில் பிளஸ் 1 மாணவியை மிரட்டிச் சென்ற மர்மநபர்களை கண்காணிப்புக் கேமராக்கள் மூலம் அடையாளம் கண்டு கைது செய்ய போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவி கடந்த 2018 ஆம் ஆண்டு ஒருவரால் பாலியல் பலாத்காரத்துக்கு உள்படுத்தப்பட்டார். இதுதொடர்பாக பரமக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, வழக்கு விசாரணை ராமநாதபுரம் நீதிமன்றத்தில் நடந்துவருகிறது.
தற்போது அந்த மாணவி ராமநாதபுரம் அரசுப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். இந்நிலையில் அவரது வழக்கில் விசாரணை முடிந்து தீர்ப்பு கூறப்படலாம் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதற்கிடையே கடந்த வியாழக்கிழமை மாலையில் பள்ளி முடிந்து மாணவி வரும் போது இரு சக்கர வாகனத்தில் வந்த 3 பேர் அவரை மிரட்டிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக மாணவி அளித்த புகாரின் பேரில் கேணிக்கரை போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர். அதனடிப்படையில் மாணவியை மிரட்டியவர்களை நகரில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சி
மூலம் அடையாளம் கண்டு கைது செய்ய தீவிர நடவடிக்கை எடுத்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.