முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் கோயில்களில் ஆடித் திருவிழா
By DIN | Published On : 04th August 2019 03:49 AM | Last Updated : 04th August 2019 03:49 AM | அ+அ அ- |

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆடி பெருக்கு விழாவை முன்னிட்டு பல்வேறு கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் சனிக்கிழமை நடைபெற்றன.
நயினார்கோவில் நாகநாத சுவாமி கோயில் ஆடிப் பூர திருக்கல்யாண திருவிழா தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக் கோயிலில் விழா கடந்த மாதம் 25 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் வெள்ளிக்கிழமை (ஆக. 2) காலை 6 மணியளவில் ரதரோகனமும், அன்று காலை 8.30 மணிக்கு மேல் செளந்தரநாயகி தாயார் சிறப்பு அலங்காரத்தில் திருத்தேரில் எழுந்தருளி பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தேரோட்டம் நடைபெற்றது. ஆடி 18 ஆம் நாளான சனிக்கிழமை காலை 11 முதல் 12 மணியளவில் தீர்த்தோத்ஸவம், யாக கும்பாபிஷேகமும், அன்று மாலையில் மஞ்சள் விளையாட்டு நிகழ்ச்சியும் நடைபெற்றது.
விழா ஏற்பாட்டினை ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தான அறங்காவலர் சேதுபதி ராணி ஆர்.பி.கே.ராஜேஸ்வரிநாச்சியார், சரக பொறுப்பாளர் எம்.பி.வைரவசுப்பிரமணியன், நிர்வாகச் செயலாளர் கே.பழனிவேல்பாண்டியன் ஆகியோர் செய்திருந்தனர்.
திருவாடானை: திருவாடானை அருகே திருவிடைமருதூரில் உள்ள பாண்டி முனீஸ்வரர் கோயிலில் ஆடிமாத பூக்குழி திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது. இதில் பால் குடம், மயில் காவடி, வேல் காவடி, தீச் சட்டி எடுத்து ஊர்வலமாக வந்து பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக் கடன் செலுத்தினர். முன்னதாக பக்தர்கள் ஆதிரெத்தினேஸ்வரர் விநாயகர் கோயிலில் இருந்து காவடி எடுத்து ஊர்வலமாக வந்தனர். அதனை தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு பூஜைகளும், ஆராதனைகளும் நடைபெற்றன.
தொண்டி: தொண்டி அருகே எ, மணக்குடியில் உள்ள யோகநாச்சியார் கோயிலில் ஆடி வெள்ளியை முன்னிட்டு இரவு 1008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் பெண்கள் மாங்கல்ய குங்கும பூஜை செய்து வழிபட்டனர். இதைத் தொடர்ந்து திருவிளக்கு பூஜை நடைபெற்றது. பின்னர் அம்மனுக்கு பால் சந்தனம் பன்னீர் பழங்கள் தயிர் உள்ளிட்ட பல்வேறு பொருள்களுடன் சிறப்பு பூஜைகள், அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதில் முன்னாள் அமைச்சர் வது நடராஜன், முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் வதுந. ஆனந்த், மருத்துவர் மணிவண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கமுதி: ஆஞ்சநேயர் கோயிலில் அரசு-வேம்பு மரம் பின்னி ஒன்றாக வளர்ந்துள்ளது. அரச மரத்தை சிவனாகவும், வேப்ப மரத்தை பார்வதியாகவும் பாவித்து பக்தர்கள் ஆண்டுதோறும் ஆடி 18 ஆம் பெருக்கு அன்று சிறப்பு பூஜைகள் செய்து, பட்டாடையில் அலங்கரித்து, திருக்கல்யாணம் நடைபெறுவது வழக்கம். இந்தாண்டும், திருக்கல்யாணம் சனிக்கிழமை நடைபெற்றது. இதனையடுத்து மாலை மீனாட்சி அம்மன் அன்ன வாகனத்தில் புறப்பாடு நடைபெற்றது. கமுதியின் முக்கிய வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அம்மன் காட்சியளித்தார். ஏற்பாடுகளை மேட்டுதெரு இளைஞர்கள், பக்தர்கள் செய்தனர்.
சாயல்குடி: சாயல்குடி அருகே மாரியூர் பூவேந்தியநாதர் கோயில், பவள நிறவள்ளி அம்மன் ஆலயத்தில் ஆடி பெருக்கு திருநாளை முன்னிட்டு சுமங்கலி பூஜை நடைபெற்றது. விழாவில் சிறப்பு பூஜைகள் மற்றும் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் பெண்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் வடக்கு வாசல் செல்லி அம்மன் கோயிலில் ஆடி பெருக்கு திருநாளை முன்னிட்டு சுமங்கலி பெண்கள் பழைய தாலிக் கயிறு மாற்றி
புதிய நூல்பெருக்கி சுமங்கலி பூஜை நடத்தினர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கீழக்கரை: கீழக்கரை சொக்கநாதர் தெருவில் அமைந்துள்ள சொக்கநாதர் மீனாட்சி ஆலயத்தில் ஆடி 18 ஆம் பெருக்கை முன்னிட்டு சுமங்கலி பூûஐ சனிக்கிழமை நடைபெற்றது. இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 500 -க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டனர்.