பரமக்குடியில் வாரச்சந்தை ஆக்கிரமிப்பு கடைகளால் போக்குவரத்து நெரிசல்

பரமக்குடியில் வாரந்தோறும் வியாழக்கிழமை நடந்துவரும் வாரச்சந்தை நாளன்று அதற்காக ஒதுக்கப்பட்ட இடத்தை விட்டுவிட்டு மதுரை-ராமேசுவரம்


பரமக்குடியில் வாரந்தோறும் வியாழக்கிழமை நடந்துவரும் வாரச்சந்தை நாளன்று அதற்காக ஒதுக்கப்பட்ட இடத்தை விட்டுவிட்டு மதுரை-ராமேசுவரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலைப் பகுதியில் பல்வேறு கடைகள் அமைப்பதால்  போக்குவரத்து நெரிசலில் பொதுமக்கள் சிக்கித் தவிக்கின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் பலதரப்பட்ட பொருள்கள் விற்பனை செய்யும் வாரச்சந்தை  நடந்து வருகிறது. இதற்காக நகரின் முக்கிய பகுதியான பேருந்து நிறுத்தம் அருகிலேயே மதுரை-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலை செல்லும் பகுதியை ஒட்டி 7 ஏக்கருக்கும் மேற்பட்ட பகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் ஆடு,மாடு, கோழி விற்பனைக்கு தனி இடமும், காய்கறிகள், பழங்கள் உள்பட பல்வேறு பொருள்கள் விற்பனை செய்வதற்கு என தனித்தனி இடங்களும் ஒதுக்கப்பட்டு, வியாபாரிகளிடம் அதற்கான நகராட்சி வரியும் வசூலிக்கப்பட்டு வருகிறது. 
 இந்நிலையில் சில வியாபாரிகள் வாரச்சந்தைக்காக ஒதுக்கப்பட்ட இடத்தினை விட்டுவிட்டு பொதுமக்கள் அதிகம் வந்து செல்லக்கூடிய போக்குவரத்து நிறைந்த மதுரை-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையின் இருபுற ஓரங்களிலும், பேருந்து நிலையத்திலிருந்து, பாரதியார் நடுநிலைப் பள்ளி வரை கடைகள் அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். மேலும் சந்தைக்கு வரும் பொதுமக்களும் தங்களது இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள் என சாலையோரம் நிறுத்திவிட்டு பொருள்கள் வாங்கச் செல்வதால் தேசிய நெடுஞ்சாலைப் பகுதி முழுவதும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.  
இதுபோன்ற போக்குவரத்து நெரிசலை தவிர்க்க பொதுமக்களின் நலன் கருதி வாரச்சந்தைக்காக ஒதுக்கப்பட்ட இடங்களில் கடைகள் அமைத்து வியாபாரம் செய்ய நகராட்சி நிர்வாகமும், போக்குவரத்து போலீஸாரும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com