உப்பூர் அனல் மின்நிலையத் திட்டத்தில் கழிவுகளை கொட்ட கடல் மீது பாலம் அமைப்பதற்கு மீனவர்கள் எதிர்ப்பு
By DIN | Published On : 09th August 2019 07:35 AM | Last Updated : 09th August 2019 07:35 AM | அ+அ அ- |

திருவாடானை அருகேயுள்ள உப்பூர் அனல் மின்நிலைய திட்டத்தில் கழிவுகளை கொட்டுவதற்காக, கடல் மீது கட்டப்படும் பாலத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, மோர்ப்பண்ணை, திருப்பாலைக்குடி மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லாமல் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொண்டி அருகேயுள்ள உப்பூர் கிராமத்தில், தமிழக அரசு 1,600 மெகாவாட் திறன்கொண்ட அனல் மின் நிலையம் அமைத்து வருகிறது. சுமார் ரூ. 1000 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் இத்திட்டத்துக்கான விளைநிலங்கள் கையகப்படுத்தப்பட்டதற்கு, விவசாயிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், தற்போது அனல் மின்நிலையத் திட்டத்தில் கழிவுகளை வெளியேற்றுவதற்காக, கடல் மீது சுமார் 6 கி.மீ. தொலைவுக்கு பாலம் கட்டி குழாய் கொண்டு செல்லும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதனால், மீனவர்கள் மீன்பிடி படகுகளைக் கொண்டு செல்வதில் சிக்கல் உள்ளதாகவும், கடலுக்குள் அனல் மின்நிலையக்
கழிவுகளை விடுவதால் மீன்வளம் பாதிக்கக்கூடும் எனவும், மீனவர்கள் புகார் தெரிவித்தனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மோர்பண்ணை, திருப்பாலைக்குடி மீனவர்கள் கடலுக்குச் செல்லாமல் தங்களது படகுகளை கரையில் நிறுத்தி, கிராமத் தலைவர் கோவிந்தன், முன்னாள் தலைவர் துரைபாலன் ஆகியோர் தலைமையில், வியாழக்கிழமை கடற்கரையில் அமர்ந்து பேராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அடுத்தக் கட்டப் போராட்டம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
தகவலறிந்த திருவாடானை காவல் துணைக் கண்காணிப்பாளர் புகழேந்தி கணேஷ், ஆர்.எஸ்.மங்கலம் வட்டாட்சியர் சாந்தி, மின்வாரிய அதிகாரி ஜெய்சங்கர் ஆகியோர் சம்பவ இடத்துக்குச் சென்று மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதில், கடல் மீது பாலம் கட்டும் பணியை உடனடியாக நிறுத்திவிட்டு, மாவட்ட ஆட்சியர் தலைமையில் மீனவர்களிடம் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்திய பின்னரே, பணிகளை தொடரவேண்டும் என மீனவர்கள் வலியுறுத்தினர். இதற்கு, அதிகாரிகள் தரப்பில் சம்மதம் தெரிவிக்காததால், கடலுக்கு மீன்பிடிக்கச் செல்வதில்லை என மீனவர்கள் திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.