ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரே நாளில் 223 கோயில்களில் முளைப்பாரி திருவிழா

ராமநாதபுரம் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் மட்டும் 223 கோயில்களில் முளைப்பாரி திருவிழாக்கள் நடைபெற்றன.

ராமநாதபுரம் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் மட்டும் 223 கோயில்களில் முளைப்பாரி திருவிழாக்கள் நடைபெற்றன.
ஆடி மாதத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அம்மன் கோயில்களிலும் ஆகஸ்ட் முதலே திருவிழாக்கள் தொடங்கி நடந்து வருகின்றன. இந்நிலையில், விழாவின் முக்கிய நிகழ்வான முளைப்பாரி மற்றும் அக்னிச்சட்டி நேர்த்திக்கடன் எடுக்கும் பூஜைகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன. ராமநாதபுரம்  எம்எஸ்கே நகரில் உள்ள பூமாரி அம்மன், முத்து மாரியம்மன் கோயில் உள்ளிட்ட 28 கோயில்களில் முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றன. இதனால், நகரே விழாக்கோலம் பூண்டு காணப்பட்டது. எங்கு பார்த்தாலும் துளசி மாலை அணிந்து மஞ்சள் ஆடை அணிந்த பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்த மேளதாளங்களுடன் சென்றனர்.
 அதேபோல தேவிபட்டினம் பகுதியில் 26 கோயில்களிலும், பரமக்குடியில் 109 கோயில்களிலும் முளைப்பாரி ஊர்வலங்கள் நடைபெற்றன. கமுதி, கடலாடி, நயினார்கோவில் என அனைத்து இடங்களிலும் உள்ள அம்மன் கோயில்களில்  முளைப்பாரி மற்றும் அக்னிச்சட்டி ஏந்தியும், வாயில் அலகுகுத்தியும் நேர்த்திக்கடனை பக்தர்கள் செலுத்தினர்.
அம்மன் கோயில் திருவிழாக்களை முன்னிட்டு நாடகம், கரகாட்டம் போன்ற கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. அனைத்துக் கோயில்களிலும் கூழ்காய்ச்சி வழங்கப்பட்டது. மேலும் அன்னதானமும் நடைபெற்றது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com