ஆரோக்கியமான குழந்தைகளுக்கு ஆட்சியர் பரிசு

ராமநாதபுரத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஆரோக்கியமான குழந்தைகள் போட்டியில் வெற்றி பெற்ற

ராமநாதபுரத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஆரோக்கியமான குழந்தைகள் போட்டியில் வெற்றி பெற்ற குழந்தைகள் மற்றும் அவர்களின் தாய்மார்களுக்கு ஆட்சியர் கொ.வீரராகவராவ் பரிசளித்தார்.
 ராமநாதபுரம் மாவட்டம் சேதுபதி அரசு கலைக்கல்லூரியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டப் பணிகள் சார்பில் உலக தாய்ப்பால் வார விழாவினை முன்னிட்டு ஆரோக்கிய குழந்தை போட்டி புதன்கிழமை நடைபெற்றது. இதில் ஏராளமான தாய்மார்கள் தங்களது குழந்தைகளுடன் கலந்து கொண்டனர்.
 குழந்தையின் எடை, செயல்பாடு போன்றவற்றின் மூலம் ஆரோக்கிய குழந்தை தேர்வு செய்யப்பட்டது. விழாவுக்கு ராமாதபுரம் மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ் தலைமை வகித்துப் பேசியது: ராமநாதபுரம் மாவட்டத்தில் மொத்தம் 1,454 ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இம்மையங்கள் மூலம் கருவுற்ற தாய்மார்களை கணக்கெடுத்தல், அவர்களின் உடல் ஆரோக்கியத்திற்கான ஊட்டச்சத்து மருந்துகள், மாத்திரைகள் வழங்குதல், பச்சிளம் குழந்தைகளின் நலனை பாதுகாத்தல் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.  குழந்தைகளுக்கு கட்டாயம் தாய்ப்பால் வழங்க வேண்டும். அனைத்து ஊட்டச்சத்துக்களும் தாய்ப்பாலில் மட்டுமே உள்ளன. குழந்தை பிறந்தவுடன் ஒரு மணி நேரத்திற்குள் தாய்ப்பால் வழங்குவதன் மூலம் குழந்தையின் உடல் ஆரோக்கியம் மேம்படுவதோடு நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும் என்றார்.
  நிகழ்ச்சியில் அமைக்கப்பட்டிருந்த கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களின் நலனுக்கான ஆரோக்கிய உணவு பழக்கவழக்கங்கள் குறித்த விழிப்புணர்வு கண்காட்சியினை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார். உலக தாய்ப்பால் வார விழாவினை முன்னிட்டு நடத்தப்பட்ட ஆரோக்கிய குழந்தைக்கான போட்டி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான கட்டுரை மற்றும் கவிதை போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளையும் அவர் வழங்கினார்.
 விழாவில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் வி.ஜெயந்தி, சேதுபதி அரசு கலைக்கல்லூரி முதல்வர் க.மகுதம்மாள், ராமநாதபுரம் வட்டார மருத்துவ அலுவலர் தா.மகேஷ்வரி, புதுமடம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய இயற்கை மற்றும் யோகா மருத்துவர் எல்.ஷர்மிளா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com