பரமக்குடி அருகே கி.பி.10 ஆம் நூற்றாண்டு சமணத் தீர்த்தங்கரர் சிற்பம் கண்டெடுப்பு

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள கலையூர் கிராமத்தில் உடையார் அய்யனார் கோயிலில்

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள கலையூர் கிராமத்தில் உடையார் அய்யனார் கோயிலில் கி.பி. 10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த உடைந்த நிலையிலான சமணத் தீர்த்தங்கரர் சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 
கலையூர் கிராமத்தில் ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு, திருவாடானை துணை வட்டாட்சியர் சி.ஆண்டி ஆகியோர் கள மேற்பரப்பாய்வு செய்தபோது அங்குள்ள வில்லார் உடையார் அய்யனார் கோயிலில் உடைந்த நிலையிலிருந்த சமணத் தீர்த்தங்கரர் சிற்பத்தைக் கண்டெடுத்தனர். 
 இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளர் ராஜகுரு கூறியது: ராமநாதபுரம் மாவட்டத்தில் பெரியபட்டிணம், மேலக்கிடாரம், கீழச்சீத்தை, கீழச்சாக்குளம், பசும்பொன், கமுதி, பொக்கனாரேந்தல், மேல அரும்பூர், அருங்குளம், திருப்புல்லாணி, புல்லக்கடம்பன், புல்லுகுடி, புல்லூர், புல்லங்குடி உள்ளிட்ட இடங்களில் சமண மதம் பரவி இருந்ததற்கான தடயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.  
இதுபோல் தற்போது கலையூரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சிற்பம் 2 அடி உயரமும், 1.5 அடி அகலமும்  உள்ளது. முழுவதும் கருங்கல்லால் ஆனது. இச்சிற்பத்தில் அசோக மரத்தின் வளைந்த கிளைகளின் கீழ் பிரபாவளி என்னும் ஒளிவட்டம் உள்ளது.  பிரபாவளியின் உள்ளே அமர்ந்த நிலையில் சமண தீர்த்தங்கரர் சிற்பம் இருந்திருக்க வேண்டும். தீர்த்தங்கரர் உருவம் இருந்த பகுதி முழுவதும் உடைந்து சிதைக்கப்பட்டுள்ளது. 
பிரபாவளியின் மேல்பகுதியில் முக்குடை என்ற அமைப்பு உள்ளது. முக்குடை என்பது சமண சமயச் சின்னம் ஆகும். இச்சிற்பத்தின் அமைப்பைக் கொண்டு இது சமண சமயத்தின் 24-வது தீர்த்தங்கரரான மகாவீரரரின் சிற்பமாக இருக்கும் என ஊகிக்கலாம்.  இதன் காலம் கி.பி.10 ஆம் நூற்றாண்டாக கருதலாம். 
 இக்கோயில் வளாகத்தில் மணற்பாறையில் செதுக்கப்பட்ட பூரணி, பொற்கலையுடன் காட்சி தரும் சிறிய அளவிலான ஐயனார் சிற்பம் ஒன்று மிகவும் தேய்ந்த நிலையில் உள்ளது. இது சுமார் 500 ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com