ராமநாதபுரம் ராமகிருஷ்ண மடத்தில் கிருஷ்ண ஜயந்தி விழா

ராமநாதபுரத்தில் உள்ள ராமகிருஷ்ண மடத்தில் கிருஷ்ண ஜயந்தியை யொட்டி சிறப்பு பூஜைகள் மற்றும்

ராமநாதபுரத்தில் உள்ள ராமகிருஷ்ண மடத்தில் கிருஷ்ண ஜயந்தியை யொட்டி சிறப்பு பூஜைகள் மற்றும் குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன. 
கிருஷ்ண ஜெயந்தியை யொட்டி அதிகாலையில் மடத்தின் தலைவர் சுவாமி சுதபானந்தர் தலைமையில் மங்கள ஆரத்தி, சிறப்புப் பூஜைகளுடன் விழா தொடங்கியது.
 பஜனை மற்றும் கிருஷ்ணர் மகிமை சொற்பொழிவுகளைத் தொடர்ந்து ஹிந்து வித்யாலயா பள்ளி மற்றும் அமிர்தானந்த மயி வித்யாலயா பள்ளி மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கிருஷ்ணரின் பக்திப் பாடல்களுக்கு கிருஷ்ண, ராதை வேடமணிந்த குழந்தைகள் நடனமாடி பார்வையாளர்களை கவர்ந்தனர். 
 நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற தமிழாசிரியர் மாயழகு, சிவராமன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பகலில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.  
கோயில்களில் சிறப்புப் பூஜைகள்: ராமநாதபுரம் நகர் அருகே உள்ள அச்சுந்தன்வயல் கிருஷ்ணர் கோயிலில் பாலாபிஷேகம் நடைபெற்றது. கீரந்தையில் உள்ள கண்ணன் கோயிலில் உறியடித் திருவிழா மற்றும் குழந்தைகளுக்கான கலைப் போட்டிகளும் பரிசளிப்பு விழாவும் நடைபெற்றன. 
மேலும், புத்தேந்தல், பேராவூர், பட்டிணம்காத்தான், காட்டூரணி மற்றும் பரமக்குடி பகுதிகளிலும், இலந்தைக்குளம், கமுதக்குடி, விளாத்தூர், கமுதி பகுதியில் புதுக்கோட்டை, குடகுளம், உச்சிநத்தம், மண்டபம் பகுதியில் இடையர்வலசை மற்றும், ராமேசுவரம் உள்ளிட்ட பகுதிகளிலும் கண்ணன் கோயில்களில் சிறப்புப் பூஜைகளும்,  உறியடி, வழுக்கு மரம் ஏறுதல் உள்ளிட்டவை நடத்தப்பட்டன. 
மாவட்டத்தில் மொத்தம் 189 இடங்களில் கண்ணன் கோயில்களில் உறியடி விழா, பாலாபிஷேகம் சிறப்பு பூஜைகளுடன் கிருஷ்ண ஜயந்தி விழாக்கள் நடைபெற்றன. அனைத்து இடங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பும் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com