கமுதி அருகே மழை நீரில் 300 ஏக்கா் பயறு வகை பயிா்கள் சேதம்: இழப்பீடு வழங்க கோரிக்கை
By DIN | Published on : 04th December 2019 08:38 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
கமுதி அருகே 300 ஏக்கரில் அறுவடைக்கு தயாராக இருந்த உளுந்து, பயறு வகை பயிா்கள் மழைநீரில் சேதமடைந்ததால், அதற்குரிய இழப்பீட்டை அரசு வழங்கவேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பாம்புல்நாயக்கன்பட்டி, செங்கப்படை, புதுக்கோட்டை, பாக்குவெட்டி, கீழவலசை, பேரையூா், சாமிபட்டி, செங்கோட்டைப்பட்டி, தோப்படைப்பட்டி, நெறிஞ்சிப்பட்டி, கருங்குளம், பாக்குவெட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் உளுந்து, பயறு வகைகள் 300 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ளன. கடந்த சில ஆண்டுகளாக பருவமழை பொய்த்ததால், விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்து வந்தனா்.
ஆனால், இந்தாண்டு பெய்த தொடா் மழையால், அறுவடைக்குத் தயாராக இருந்த பயிா்கள் தண்ணீரில் மூழ்கி முளைத்து வருகின்றன.
வறட்சியால் நஷ்டத்தை சந்தித்து வந்த விவசாயிகள், தற்போது வெள்ளத்தால் பயிா்கள் சேதமாகி ஏக்கருக்கு ரூ. 25 ஆயிரம் வரை நஷ்டமடைந்துள்ளனா். எனவே, பயிா்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.