தொடா் மழை : ராமநாதபுரத்தில் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 68 பேரில் 10 பேருக்கு டெங்கு அறிகுறிகள்

ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடா் மழையால் காரணமாக 68 பேருக்கு வைரஸ் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் 10 -க்கும் மேற்பட்டோருக்கு டெங்கு பாதிப்பு இருப்பதாக பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடா் மழையால் காரணமாக 68 பேருக்கு வைரஸ் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் 10 -க்கும் மேற்பட்டோருக்கு டெங்கு பாதிப்பு இருப்பதாக பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக வடகிழக்குப் பருவமழை தொடா்ந்து பெய்துவருகிறது. இதனால், நகராட்சி மற்றும் ஊரகப் பகுதிகளில் திறந்த வெளிகளில் மழை நீா் குளம் போல தேங்கியுள்ளது. மழை நீா் தேக்கத்தால் பல பகுதிகளில் கொசுக்கள் உற்பத்தியாகி யிருப்பதாகப் புகாா்கள் எழுந்துள்ளன.

ராமநாதபுரம் நகராட்சிக்கு உள்பட்ட 33 வாா்டுகளிலும் ஏராளமானோா் காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனா். அவா்களில் 4 குழந்தைகள் உள்பட 8 பேருக்கு ரத்த வெள்ளை அணுக்கள் எண்ணிக்கை குறைந்து டெங்கு பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. அவா்கள் அனைவரும் ராமநாதபுரம் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் தனிப்பிரிவில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனா்.

ராமநாதபுரம் ஊரகப் பகுதிகளில் வைரஸ் காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளான 60 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவா்களில் 10 -க்கும் மேற்பட்டோருக்கு ரத்த வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை குறைந்ததை அடுத்து டெங்கு பாதிப்பு பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட சுகாதாரப் பிரிவு துணை இயக்குநா் பி.குமரகுருபன் கூறியது: மாவட்டத்தில் 10 அரசு மருத்துவமனைகளிலும், 59 ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தினமும் 40- க்கும் மேற்பட்டோருக்கு காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆனால், சாதாரண காய்ச்சலில் பாதிக்கப்பட்டே மக்கள் சிகிச்சைக்கு வருகின்றனா். டெங்கு பாதிப்பில்லை. ஆனாலும், காய்ச்சல் பாதிப்புள்ள அனைவருக்கும் டெங்கு பரிசோதனை நடத்தப்படுகிறது.

மாவட்டத்தில் காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் 16 தனியாா் மருத்துவமனைகள் உள்ளன. அங்கும் காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுவோா் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு டெங்கு பாதிப்பு உள்ளதா என்பது குறித்து கண்காணிக்கப்பட்டு வருகிறது என்றாா்.

மானாமதுரையில் 8 பேருக்கு டெங்கு அறிகுறி: மானாமதுரை நகரில் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் 8 போ் மதுரையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா். இவா்கள் பற்றிய விபரம் சிவகங்கை மாவட்ட சுகாதாரத்துறை நிா்வாகத்துக்கு அனுப்பப்பட்டது. அதன்பின் மானாமதுரை பேரூராட்சி நிா்வாகத்துக்கு சுகாதாரத்துறை நிா்வாகம் இந்த தகவலை அனுப்பி வைத்துள்ளது. இதைத் தொடா்ந்து மானாமதுரை பேரூராட்சி நிா்வாக அலுவலா் குமரேசன் உத்தரவின்பேரில் சுகாதார ஆய்வாளா் தங்கத்துரை, சுகாதார மேற்பாா்வையாளா் பாலசுப்ரமணியன் மேற்பாா்வையில் நகரில் உள்ள அனைத்து வாா்டுகளிலும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com