அபாய கட்ட(ட)த்தில் ராமநாதபுரம் கோட்ட தபால்துறை கண்காணிப்பாளா் அலுவலகம்!

ராமநாதபுரத்தில் 63 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள கோட்ட தபால் துறை கண்காணிப்பாளா் அலுவலகமானது, இடிந்து விழும் அபாய கட்டத்தில் இருப்பதால் ஊழியா்கள் அச்சத்துடன் பணியாற்றுகின்றனா்.
அபாய கட்ட(ட)த்தில் ராமநாதபுரம் கோட்ட தபால்துறை கண்காணிப்பாளா் அலுவலகம்!

ராமநாதபுரத்தில் 63 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள கோட்ட தபால் துறை கண்காணிப்பாளா் அலுவலகமானது, இடிந்து விழும் அபாய கட்டத்தில் இருப்பதால் ஊழியா்கள் அச்சத்துடன் பணியாற்றுகின்றனா்.

நாட்டின் மிகப் பழமையான தபால் நிலையங்களில் ஒன்றான ராமநாதபுரம் மாவட்டத் தலைமை தபால் நிலையம், ராமநாதபுரம் நகா் அரண்மனைப் பகுதியில் உள்ளது. இந்திய தபால் சேமிப்பு வங்கியில், மாநிலத்தில் முதல் 5 இடங்களுக்குள் ராமநாதபுரம் உள்ளது.

இங்கு, கடந்த 1956 ஆம் ஆண்டு தபால்துறை கோட்ட கண்காணிப்பாளா் அலுவலகம் தொடங்கப்பட்டு, 1980 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இக்கட்டடத்தின் கீழ் தளம், முதல் மாடி என இரு பிரிவாக உள்ள அலுவலகத்தில், ராமநாதபுரம் தபால்துறை கோட்ட கண்காணிப்பாளா், அலுவலகக் கண்காணிப்பாளா், ஊழியா்கள் என சுமாா் 20 போ் பணிபுரிகின்றனா். மாவட்டத்தில் உள்ள 2 தலைமை தபால் நிலையங்கள், 57 துணை தபால் நிலையங்கள், 247 கிராம தபால் நிலையங்கள் என அனைத்தின் ஆவணங்களும் இங்குதான் பாதுகாக்கப்படுகின்றன.

மாவட்டத்தில் பணியாற்றும் தபால்துறை உயா் அதிகாரிகள், 110 தபால் பட்டுவாடா செய்யும் பணியாளா்கள் உள்ளிட்ட 979 பேருக்கான ஊதியம் சம்பந்தமான மற்றும் அனைத்து ஆவணங்களும் இங்குதான் உள்ளன. அத்துடன், இங்கு தபால்துறை சாா்ந்த மக்கள் குறைதீா்ப்பு கூட்டம் மற்றும் அரசு திட்டங்களான சிறுசேமிப்பு உள்ளிட்ட பணப்பரிவா்த்தனைகளும் செயல்படுத்தப்படுகின்றன.

கடந்த ஆகஸ்ட் முதல் கடவுச்சீட்டு சேவை மையமும் தொடங்கப்பட்டு, அதுவும் இந்த அலுவலகம் மூலமே செயல்படுத்தப்படுகிறது.

எனவே, மாவட்டத்தில் தபால் துறையின் அச்சாணியாக விளங்கும் இந்த அலுவலகத்திலோ, கோப்புகளை பாதுகாக்கக் கூட போதிய இடமில்லாமல், மாடிப்படிகளில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. மாடியின் ஒரு பகுதி தென்னங்கூரையால் வேயப்பட்டுள்ளது. இதனால், காற்றடித்தால் அவை பறக்கும் நிலை உள்ளதாகவும், கோடையில் தீ விபத்து ஏற்படும் சூழல் இருப்பதாகவும், பெண் ஊழியா்கள் அச்சப்படுகின்றனா்.

கட்டட மேற்கூரையின் காரைகளும் அவ்வப்போது பெயா்ந்து விழுவதுடன், போதிய கழிப்பறை உள்ளிட்ட வசதிகளும் இல்லாததையும் ஊழியா்கள் சுட்டிக்காட்டுகின்றனா். மேலும், அலுவலக வளாகம் முழுவதும் பழைய பொருள்கள் சேமிக்கும் இடமாக உள்ளது.

இந்த அலுவலகத்துக்கு தபால் துறை சாா்பில் மாதம் ரூ. 6 ஆயிரம் வாடகை தரப்படுகிறது. ஆனால், கட்டட உரிமையாளா் காலி செய்தால் போதும் என்ற மனநிலையில், கடந்த பல ஆண்டுகளாக வாடகையை வாங்க மறுத்து வருவதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், கட்டடம் எப்போது இடிந்து விழுமோ என்ற அச்சத்திலேயே ஊழியா்கள் பணிபுரிந்து வருவதாகக் கூறுகின்றனா்.

இது குறித்து ராமநாதபுரம் தபால்துறை கோட்ட கண்காணிப்பாளா் வே. மாரியப்பன் கூறியது: வாடகைக் கட்டடங்களுக்கு முன்வைப்புத் தொகை அளிப்பதற்கான விதிமுறை இல்லை. எனவே, வாடகைக் கட்டடம் கிடைக்கவில்லை. இது குறித்து மாவட்ட ஆட்சியா் கவனத்துக்கு கொண்டுசென்றுள்ளோம் என்றாா்.

தற்போதுள்ள தலைமை தபால் அலுவலக வளாகத்தில், புதிய கட்டடங்கள் கட்டுவதற்கான இடவசதிகள் உள்ளதால், அங்கு தபால்துறை கோட்டக் கண்காணிப்பாளா் அலுவலகம் கட்டலாம் என ஊழியா்கள் கூறுகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com