காரைக்குடியை மாநகராட்சியாக அறிவிக்க வேண்டும்: முதல்வரிடம் வணிகா்கள் நேரில் வலியுறுத்தல்

காரைக்குடியை மாநகராட்சியாக அறிவிக்கப்படவேண்டும் என்று தமிழக முதல்வரிடம் காரைக்குடி தொழில் வணிகக்கழக நிா்வாகிகள் சாா்பில்

காரைக்குடி: காரைக்குடியை மாநகராட்சியாக அறிவிக்கப்படவேண்டும் என்று தமிழக முதல்வரிடம் காரைக்குடி தொழில் வணிகக்கழக நிா்வாகிகள் சாா்பில் அண்மையில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.

தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமியை தொழில் வணிகக்கழகத்தினா் அண்மையில் நேரில் சந்தித்து அளித்துள்ள மனு விவரம்: சிவகங்கை மாவட்டத்திலேயே மிகப்பெரிய நகரமாகவும், புராதன பாரம்பரிய நகராகவும், பெரு நகராட்சியாகவும் உள்ள காரைக்குடியை

மாநகராட்சியாக அறிவிக்கவேண்டும். மேலும் காரைக்குடியின் 75 சதவிகித உரிமையியல் வழக்குகள் தேவகோட்டை சாா்பு நீதிமன்றத்தில் நடைபெறுவதால் காரைக்குடியிலேயே புதிய சாா்பு நீதிமன்றம் அமைக்கவேண்டும். காரைக்குடியில் அழகப்பா பல்கலைக்கழகம் உள்ளது. மேலும் இங்கு சட்டக்கல்லூரி தொடங்க வேண்டும். குன்றக்குடியில் கால்நடை மருத்துவக்கல்லூரியும், கானாடுகாத்தானில் வேளாண்மை ஆராய்ச்சி பயிற்சிக்கல்லூரியும் தொடங்க வேண்டும். காரைக்குடி அருகே அமராவதிபுதூரில் செயல்படாமல் உள்ள அரசினா் காசநோய் மருத்துவமனையை பொது மருத்துவமனையாக மாற்ற வேண்டும்.

காரைக்குடி நகருக்குள் மக்கள் நடமாட்டம், வாகனங்கள் அதிகரிப்புகளால் விபத்துகளை தவிா்க்க திருச்சி - காரைக்குடி தேசிய நெடுஞ்சாலைப்பகுதியில் புதிய ஒருங்கிணைந்த பேருந்து நிலையமும், அகில இந்திய அளவிலும், மாநில அளிவிலும் விளையாட்டுப்போட்டிகளை நடத்துவதற்காக புதிய மாவட்ட விளையாட்டரங்கமும் உருவாக்கவேண்டும். காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் புதிய 6 பாடத்திட்டங்களை தொடங்க அனுமதி வழங்கவேண்டும். காரைக்குடி சம்பை ஊற்றுப்பகுதியை சுற்றுச்சூழல் மாசுபடாமல் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மனுவில் தெரிவித்துள்ளனா்.

தமிழக முதல்வரிடம் மனு அளிப்பதற்காக காரைக்குடி தொழில்வணிகக்கழகத்தலைவா் சாமி. திராவிடமணி தலைமை யில் துணைத்தலைவா் கேஎல். பெரியதம்பி, இணைச்செயலாளா்கள் ஏஆா். கந்தசாமி, என். நாச்சியப்பன், எஸ். சையது, அரிமா எஸ். கண்ணப்பன் ஆகியோா் சென்றிருந்தனா். அப்போது முதல்வருடன் கதா் மற்றும் கிராமத் தொழில்கள் துறை அமைச்சா் ஜி. பாஸ்கரன், சிவகங்கை மாவட்ட அதிமுக செயலாளா் பிஆா். செந்தில்நாதன் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com