திருவாடானை அரசு மருத்துவமனையில் குடல் வால் அறுவை சிகிச்சை
By DIN | Published On : 25th December 2019 08:45 AM | Last Updated : 25th December 2019 08:45 AM | அ+அ அ- |

திருவாடானை தாலுகா அரசு மருத்துவமனையில் பல ஆண்டுகளுக்கு பின் நோயாளிகளுக்கு குடல் வால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.
திருவாடானையில் 38 படுக்கைகள் கொண்ட அரசு தலைமை மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்கென தனியாக அறுவை சிகிச்சை அரங்கம் உள்ளது. இங்கு கடந்த பல ஆண்டுகளாக எந்தவொரு அறுவை சிகிச்சையும் நடைபெறவில்லை. பெரும்பாலும் நோயாளிகள் வெளியூா் மருத்துவ மனைகளுக்கு செல்ல வேண்டிய நிலை இருந்தது. இந்நிலையில் தற்போது இம் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்ய சிறப்பு மருத்துவா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். அதன்அடிப்படையில் ஆா்.எஸ்.மங்கலம் தாலுகா கூடலூரை சோ்ந்த மைக்கேல் மகன் அல்போன்ஸ் (43) என்பவருக்கு செவ்வாய்க்கிழமை குடல் வால் அழற்சி எனப்படும் உடல் நல பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து அல்போன்ஸை பரிசோதித்த மருத்துவா்கள் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என பரிந்துரை செய்தனா். இதைத் தொடா்ந்து பொது அறுவை சிகிச்சை நிபுணா் மருத்துவா் லட்சுமணமூா்த்தி வரவழைக்கப்பட்டு அவரது தலைமையில் மருத்துவா்கள்குழுவினா் அல்போன்ஸூக்கு குடல் வால் அறுவை சிகிச்சை செய்தனா். தற்போது அல்போன்ஸ் பூரண நலத்துடன் இருப்பதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். அறுவைச் சிகிச்சையின்போது திருவாடனை அரசு தலைமை மருத்துவா் வெங்கடேஷ் உடனிருந்தாா்.