சுடச்சுட

  

  பள்ளிகளில் பசுமைத் தோட்டம் முதன்மைக் கல்வி அலுவலர் வேண்டுகோள்

  By DIN  |   Published on : 13th February 2019 08:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் பசுமைத் தோட்டம் அமைக்க வேண்டியது அவசியம் என முதன்மைக் கல்வி அலுவலர் ஆர்.முருகன் கூறினார்.
   தேசிய பசுமைப்படையின் ராமநாதபுரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் முகம்மது சதக் தஸ்தகீர் கல்வியியல் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு முதன்மைக் கல்வி அலுவலர் ஆர்.முருகன் பரிசுகளை வழங்கினார். அப்போது அவர் பேசியது: உலகம் அனைவருக்கும் பொதுவானது. ஆனால், மனிதர்கள் தங்களுக்கு மட்டுமே சொந்தமானது என நினைத்து சுயநலத்துக்காக பயன்படுத்துவதால் காடுகள் அழிக்கப்படுகின்றன. மரங்கள் தான் நமது வாழ்க்கைக்கு பெரிதும் துணையாக இருப்பதால் அவற்றை ஒவ்வொருவரும் வளர்ப்பது அவசியமானது. ராமநாதபுரத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் பசுமைத் தோட்டம் அமைக்கவேண்டும். ஓரிரு பூச்செடிகளை மட்டும் வைத்து அதை பசுமைத் தோட்டம் போல காட்டுவது சரியல்ல. சில பள்ளிகளில் மாடிகளில் தோட்டம் அமைத்துள்ளனர். பசுமைத் தோட்டத்தை அமைக்கும் பள்ளிகள், அதிலிருந்து பெறப்படும் காய்கறிகளை சத்துணவுக்குப் பயன்படுத்தலாம். மூலிகைச் செடிகளையும் தோட்டத்தில் நடலாம். பசுமைப்படை சார்பில் மாணவ, மாணவியரை பசுமையான இடங்களுக்கு அழைத்துச்செல்வது அவசியம். அப்போதுதான் அவர்களுக்கு பசுமை குறித்த விழிப்புணர்வு ஏற்படும் என்றார். 
   இதில், வனம் மற்றும் கடல்வாழ் உயிரினங்கள் பாதுகாப்பு எனும் தலைப்பில் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் வனச்சரகர் எஸ்.சதீஷ் சிறப்புரையாற்றினார். உயிரின பாதுகாப்பு குறித்து காட்சிப்பட விளக்கமும் அளிக்கப்பட்டது.   நிகழ்ச்சியில் முகம்மது சதக் தஸ்தகீர் கல்வியியல் கல்லூரி முதல்வர் எஸ்.சோமசுந்தரம், தஸ்தகீர் மெட்ரிக்குலேசன் பள்ளி முதல்வர் எஸ்.விஜயகுமார் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர்.  ராமநாதபுரம் தேசிய பசுமைப்படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஏ.பெர்னாடிட்  வரவேற்றார். எஸ்.கருணாகரன் நன்றி கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai