கமுதி அருகே ரூ. 6 லட்சத்தில் கலையரங்கம்: கிராம மக்களின் முயற்சியால் சாத்தியமானது

கமுதி அருகே சாமிபட்டியில் கலையரங்கம் அமைக்க சட்டப்பேரவை, மக்களவைத் தொகுதி

கமுதி அருகே சாமிபட்டியில் கலையரங்கம் அமைக்க சட்டப்பேரவை, மக்களவைத் தொகுதி உறுப்பினர்களிடம் பலமுறை கோரிக்கை வைத்தும் நிறைவேற்றப்படாததால், தற்போது அக்கிராம மக்களின் முயற்சியால் ரூ. 6 லட்சத்தில் கலையரங்கம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
கமுதி அருகே பேரையூர் ஊராட்சிக்குட்பட்ட சாமிபட்டியில் 300 குடும்பங்களுக்கு மேல் வசித்து வருகின்றனர். இங்குள்ள நடுநிலைப்பள்ளி, கிராமத்தில் நடைபெறும் விழா போன்றவற்றை நடத்த கலையரங்கம் வசதியில்லை. 
இதனால் கலையரங்கம் அமைக்க சாமிபட்டி கிராம மக்கள் சட்டப்பேரவை, மக்களவைத் தொகுதி உறுப்பினர்களிடம் பலமுறை கோரிக்கை வைத்தும், நிதி ஒதுக்கீடு செய்யவில்லை.
இதனால் கிராம விழாக்கள், பள்ளி நிகழ்ச்சிகளை நடத்த தற்காலிக மேடை அமைக்க ரூ. 20 ஆயிரம் ரூபாய் செலவு ஆவதால், கிராம மக்கள் ஒருங்கிணைந்து நன்கொடை திரட்டி தினமும் குடும்பத்திற்கு ஒரு நபர் வீதம் கட்டுமானப் பணியில் ஈடுபட்டு, ரூ. 6 லட்சம் மதிப்பில் கலையரங்கம் அமைத்து வருகின்றனர்.
இதுகுறித்து சாமிபட்டி கிராம மக்கள் கூறியது: கமுதி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட 53 ஊராட்சிகளில் அதிக மக்கள் தொகை, பெரிய கிராமங்கள் கொண்ட ஊராட்சி பேரையூர் ஊராட்சி. பேரையூர் ஊராட்சிக்குட்பட்ட சாமிபட்டி, பேரையூர், செங்கோட்டைபட்டி, மேட்டுப்பட்டி, அய்யனார்புரம், பீட்டர்புரம் ஆகிய கிராமங்களில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் நிலையில், இங்குள்ள கிராமங்களில் கிராம விழாக்கள், அரசு மேல்நிலை, நடுநிலைப் பள்ளி நிகழ்ச்சிகளை நடத்த கலையரங்கம் வசதி கிடையாது. இதனால் பல ஆண்டுகளாக தற்காலிக மேடை அமைத்து விழா நடத்தப்பட்டதால் அதிக தொகை செலவானது.
இதனை குறைக்கும் வகையில் பொதுமக்கள், தன்னார்வலர்களிடம் நன்கொடை வசூல் செய்து கலையரங்கம் அமைத்து வருகிறோம். தொகுதி மக்களுக்கு தேவையான வசதிகளை செய்து தராத சட்டப்பேரவை, மக்களவை உறுப்பினர்களுக்கு தேர்தலில் சரியான பாடம் புகட்டுவோம் என்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com