தனுஷ்கோடியில் 927 சித்தாமை முட்டைகள் சேகரிப்பு
By DIN | Published On : 14th February 2019 06:59 AM | Last Updated : 14th February 2019 06:59 AM | அ+அ அ- |

தனுஷ்கோடி கடற்கரையில் புதன்கிழமை 927 சித்தாமை முட்டைகளை வனத்துறையினர் சேகரித்து குஞ்சு பொறிப்பகத்தில் வைத்தனர்.
ஆண்டு தோறும் டிசம்பர் முதல் ஏப்ரல் மாதம் வரை தனுஷ்கோடி பகுதிக்கு சித்தாமைகள் வந்து முட்டையிட்டுச் செல்வது வழக்கம். இந்த முட்டைகளை வனத்துறையினர் சேகரித்து பொறிப்பகத்தில் வைத்து குஞ்சு பொறித்தவுடன் கடலில் விட்டு வருகின்றனர். கடந்த ஆண்டு டிசம்பர் மாத கடைசியில் ஏராளமான சித்தாமைகள் முட்டைகள் கண்டெடுக்கப்பட்டன. இந்த முட்டைகளை முகுந்தராயர் சத்திரம் பகுதியில் குஞ்சு பொறிப்பகம் அமைத்து வனத்துறையினர் பாதுகாத்து வருகின்றனர்.
இந்நிலையில், தனுஷ்கோடி பகுதியில் புதன்கிழமை கண்காணிப்பில் ஈடுபட்ட வனத்துறையினர் மேலும் 927 சித்தாமை முட்டைகளை கண்டெடுத்தனர். அவற்றை சேகரித்து குஞ்சு பொறிப்பகத்தில் வைத்தனர். இது வரையில் மொத்தம் 4,674 முட்டைகள் குஞ்சு பொறிப்பகத்தில் வைக்கப்பட்டுள்ளதாக வனத்துறை அதிகாரி சதீஷ் தெரிவித்தார்.
ஆமை இறப்பு: இந்நிலையில், தனுஷ்கோடி பகுதிக்கு இறந்த நிலையில் சித்தாமை ஒன்று கரை ஒதுங்கியது. இதனை வனத்துறையினர் மீட்பதற்குள் கடல் சீற்றம் காரணமாக மீண்டும் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டது. இந்த ஆமை மீண்டும் கரை ஒதுங்கியவுடன் இறந்தது குறித்து ஆய்வு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.