வறட்சியில் அதிக மகசூல் தரும் நெல் ரகம் கண்டுபிடிப்பு: ராமநாதபுரத்தில் அடுத்த ஆண்டு பயிரிடத் திட்டம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் வறட்சியைத் தாங்கி அதிக மகசூல் தரும் புதிய ரக நெல் கண்டறியப்பட்டுள்ளது. வரும் 2020 ஆம் ஆண்டு இந்த ரகம் பயிரிடப்படும்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் வறட்சியைத் தாங்கி அதிக மகசூல் தரும் புதிய ரக நெல் கண்டறியப்பட்டுள்ளது. வரும் 2020 ஆம் ஆண்டு இந்த ரகம் பயிரிடப்படும்.
இது குறித்து ராமநாதபுரம் மாவட்ட கடலோர உவர் ஆராய்ச்சி மையத்தின் தலைவர் மற்றும் பேராசிரியர் என்.சாத்தையா செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ராமநாதபுரம் மாவட்ட வறட்சியை கருத்தில் கொண்டு தொடர் நெல் ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. ஒரு புதிய ரக நெல்லை ஆராய்ச்சி செய்து பயன்பாட்டுக்கு கொண்டு வர 8 ஆண்டுகளாவது தேவைப்படும். அந்த வகையில் நடப்பில் கோ 51 என்ற சன்ன ரக நெல் பயன்பாட்டில் உள்ளது.105 நாள்களில் மகசூல் தரும் இந்த நெல்லே வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பயிரிடப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக மாவட்டத்தில் மழை அளவு குறைந்துவரும் நிலையில் புதிய ரக நெல்லை கண்டுபிடிக்க ஆய்வு தொடர்ந்தது.  அதன்படி கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கோவை வேளாண்மைக் கல்வி நெல் ஆய்வு மையம் மூலம் புதிய ரக நெல் கண்டறியப்பட்டது. சிபி 06-803 என்ற தற்காலிகப் பெயரில் அழைக்கப்படும் இந்த நெல் ரகத்துக்கு இன்னும் பெயரிடப்படவில்லை. இது வரை ஆறு கட்ட ஆய்வுகள் நடைபெற்றுள்ளன. ராமநாதபுரத்தில் வழுதூர், புக்குளம், மாலங்குடி, திருப்புல்லாணி ஆகிய இடங்களில் 10 விவசாய நிலங்களில் தலா 30 கிலோ நெல் விதைக்கப்பட்டன. இதில் 7 இடங்களில் 105 நாள்களில் ஏக்கருக்கு 950 கிலோ முதல் 1755 கிலோ வரை விளைச்சல் காணப்பட்டது. மூன்று வயல்களில் காலந்தவறி விவசாயம் செய்ததால் ஏக்கருக்கு தலா 300 கிலோ முதல் 400 கிலோ வரை விளைச்சல் காணப்பட்டது. சாதாரணமாக 1 கிலோ நெல் விளைவதற்கு 105 நாள்களும்  2,500 மில்லி லிட்டர் தண்ணீரும் தேவைப்படும். புதிய ரகத்துக்கு 1,660 மில்லி லிட்டர் தண்ணீரே போதுமானதாகும். வறட்சியைத் தாண்டி மகசூல் தருவதுடன், பூச்சிக்கொல்லித் தாக்குதலையும் எதிர்கொள்வதில் இந்த ரகம் சிறந்து விளங்குகிறது.
புதிய ரக நெல் செயல்முறை விளக்கம் வெற்றியடைந்ததால், அதை அடுத்த கட்ட ஆய்வுக்கு வரும் மே மாதம் ஆய்வகத்துக்கு அனுப்பவுள்ளோம். ஆய்வில் 11 துறைகள் ஒருங்கிணைந்து செயல்படுகின்றன. வரும் 2020 ஆம் ஆண்டில் இருந்து புதிய ரக நெல் ராமநாதபுரம் போன்ற வறட்சி மிக்க பகுதிகளில் விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படும்.
ராமநாதபுரம் மாவட்ட வறட்சிக்கு ஏற்ற நெல் ரகமாக இதுவரை வந்த புதிய ரகங்களிலேயே தற்போது கண்டறியப்பட்ட நெல் ரகம் மிகவும் மேம்பட்டதாக உள்ளது என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com