முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்
"இடைத்தேர்தல் வெற்றிக்காகவே அதிமுக கூட்டணியில் பாமக சேர்ப்பு'
By DIN | Published On : 28th February 2019 07:56 AM | Last Updated : 28th February 2019 07:56 AM | அ+அ அ- |

இடைத்தேர்தல்களில் குறிப்பிட்ட 8 தொகுதிகளில் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையிலேயே அதிமுக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி சேர்க்கப்பட்டுள்ளது என தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் எம்.மணிகண்டன் தெரிவித்தார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 71 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு ராமநாதபுரத்தில் அதிமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. இதில் அமைச்சர் பேசியது:
கொள்கை அடிப்படையில் அதிமுக, பாஜகவுக்கு இடையே வேறுபாடு இருந்தாலும், தேசத்தைக் காக்க கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. பாட்டாளி மக்கள் கட்சிக்கு குறிப்பிட்ட சில தொகுதிகளில் நிலையான வாக்கு வங்கி உள்ளது. எனவே இடைத்தேர்தல் நடந்தால் வேலூர் பகுதி உள்ளிட்ட குறிப்பிட்ட 8 தொகுதிகளில் அதிமுக கூட்டணி வெற்றி பெறும். எனவே தான் மாநிலங்களவை உறுப்பினர் தொகுதியை கொடுத்து பாட்டாளி மக்கள் கட்சியுடன் அதிமுக கூட்டணி அமைத்துள்ளது.
அதிமுகவுடன் பாமக கூட்டணி வைத்ததை விமர்சிக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திமுகவை கடுமையாக விமர்சித்த வைகோவை எப்படி தனது கூட்டணியில் சேர்த்துள்ளார் என்பதை விளக்க வேண்டும். மக்கள் நலத்திட்டங்களால் அதிமுக வருங்காலத்தில் அனைத்துத் தேர்தல்களிலும் வெற்றி பெறும். திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் முதல்வர் கனவு என்றும் நனவாகாது என்றார்.
விழாவில் அதிமுக பிரமுகர்கள் தமிழ்மகன், உசேன், முருகேசன் உள்ளிட்டோர் கலந்து
கொண்டனர்.