முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்
இந்திய ராணுவத்துக்கு பாராட்டு: கமுதியில் கல்லூரி மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு
By DIN | Published On : 28th February 2019 07:57 AM | Last Updated : 28th February 2019 07:57 AM | அ+அ அ- |

காஷ்மீர் ஆக்கிரமிப்பு பகுதியில் பதுங்கியிருந்த பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் மீது பதிலடி தாக்குதல் நடத்தியதற்கு இந்திய ராணுவத்தினர் மற்றும் பிரதமருக்கு பாராட்டு தெரிவித்து, புதன்கிழமை கமுதி தேவர் நினைவு கல்லூரி மாணவர்கள் தேசியக் கொடியேந்தி, உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் இந்திய துணை ராணுவப் படையினர் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதில் 40 பேர் பலியாகினர். இதற்கு பதிலடி தரும் வகையில், இந்திய ராணுவத்தினர் காஷ்மீர் ஆக்கிரமிப்பு பகுதியில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் முகாம்கள் மீது விமானப்படைத் தாக்குதல் நடத்தி 350-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகளை அழித்தனர். இதற்கு பாராட்டு தெரிவித்த கமுதி கோட்டைமேடு தேவர் நினைவுக் கல்லூரி மாணவர்கள், புல்வாமாவில் இறந்த துணை ராணுவத்தினருக்கு அஞ்சலி செலுத்தினர். அப்போது மாணவர்கள் தேசியக் கொடியேந்தி வரும் காலத்தில் தாய் நாட்டிற்கு சேவை செய்யும் வகையில் ராணுவத்தில் பணியாற்றுவோம் என உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
இந்த உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் அருணாச்சலம் தலைமை வகித்தார். தாவரவியல் துறைத் தலைவர் தர்மர், பேராசிரியர் அழகுமலை, மேற்பார்வையாளர் சத்தியநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் பேசிய பேராசிரியர் மகாலட்சுமி, "தனது மகளை, 21 வயது நிரம்பியவுடன், ராணுவத்தில் சேர்ப்பதே எனது லட்சியம்' என்றார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர் சிவராமகிருஷ்ணன் செய்தார்.