முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்
தங்கச்சிமடத்தில் தூய்மைப் பணி தொடக்கம்
By DIN | Published On : 28th February 2019 07:57 AM | Last Updated : 28th February 2019 07:57 AM | அ+அ அ- |

ராமேசுவரம் அருகே உள்ள தங்கச்சிமடம் ஊராட்சியில் ஓ.என்.ஜி.சி நிறுவன நிதி உதவியில் வாங்கப்பட்ட குப்பை சேகரிக்கும் வாகனங்களை வட்டார வளர்ச்சி தனி அலுவலர் புதன்கிழமை தொடக்கி வைத்தார்.
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட தங்கச்சிமடம் ஊராட்சியில் மறைந்த குடியரசு முன்னாள் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல்கலாமின் நினைவிடம் உள்ளது. எனவே அந்த ஊராட்சியை தூய்மை ஊராட்சியாக மாற்றி அமைக்கும் வகையில் ஓ.என்.ஜி.சி நிறுவனம் மூலம் ஓராண்டுக்கு தூய்மை பணியை மேற்கொள்ளும் வகையில் ரூ. 80 லட்சம் மதிப்பீட்டில் திட்டம் உருவாக்கப்பட்டு "ஹேண்ட் இன் ஹேண்ட்' தனியார் நிறுவனம் மூலம் நடைமுறைபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதையடுத்து இந்த பணி தொடக்க விழா தங்கச்சிமடத்தில் புதன்கிழமை நடைபெற்றது.விழாவுக்கு மண்டபம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி தனி அலுவலர் பா.ராஜா தலைமை வகித்தார். தங்கச்சிமடம் ஊராட்சிச் செயலர் கதிரேசன் வரவேற்புரையாற்றினார். பின்னர் குப்பைகளை சேகரிப்பதற்காக புதிதாக வாங்கப்பட்ட மூன்று வாகனங்கள் தொடக்கி வைக்கப்பட்டது.
தங்கச்சிமடத்தில் முதல்கட்டமாக 9,10,11,12,13 ஆகிய வார்டுகளில் உள்ள 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகளுக்கு 20 தூய்மை தொழிலாளர்கள் சென்று குப்பைகளை தனித்தனியாக பிரித்து வாங்கி அந்த குப்பைகளை உரம் தயாரிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் ஓ.என்.ஜி.சி நிறுவனத்தை சேர்ந்த இளங்கோவன், "ஹேண்ட் இன் ஹேண்ட்' நிறுவன கண்காணிப்பாளர் பாபு மற்றும் மகளிர் சுய உதவிக்குழுவினர் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.