முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்
பிளஸ் 2 பொதுத்தேர்வு: ராமநாதபுரத்தில் தேர்வறைக் கண்காணிப்பாளர்கள் ஆலோசனை
By DIN | Published On : 28th February 2019 07:54 AM | Last Updated : 28th February 2019 07:54 AM | அ+அ அ- |

ராமநாதபுரம் மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வை கண்காணிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள தேர்வறைக் கண்காணிப்பாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 1 ஆம் தேதி தொடங்கி மார்ச் 19 ஆம் தேதி வரை நடைபெறுகின்றன. தேர்வை 56 மையங்களில் 16,127 மாணவ, மாணவியர் எழுதுகின்றனர். தேர்வு வினாத்தாள்கள் 6 மையங்களில் பாதுகாக்கப்பட்டு அங்கு 24 மணி நேர பாதுகாப்பும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ராமநாதபுரம் மாவட்ட தேர்வைக் கண்காணிக்க கள்ளர் சீரமைப்புத் துறை இணை இயக்குநர் வை.குமார் நியமிக்கப்பட்டுள்ளார். அவரது தலைமையில் தேர்வறைக் கண்காணிப்பாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் தேர்வறைகளில் மாணவ, மாணவியர் அமைதியாக தேர்வை எழுதும் சூழலை உருவாக்கவும், தேர்வறைக் கண்காணிப்பாளர்கள் விதிமுறைக்கு உள்பட்டு செல்லிடப்பேசி போன்றவற்றை தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில் தேர்வுகளின் போது தேர்வறைகளில் திடீரென கண்காணிக்கும் வகையில் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்ட அளவில் மொத்தம் 153 பேர் பறக்கும் படையில் இடம் பெற்றுள்ளனர். அவர்களை தேர்வு மண்டல அளவில் குழுக்களாகப் பிரித்து செயல்படவைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
மாவட்ட அளவில் பறக்கும் படையை 15-க்கும் மேற்பட்ட குழுக்களாகப் பிரிக்கவும், அவர்களது செயல்பாடு குறித்து விளக்கவும் வியாழக்கிழமை (பிப்ரவரி 28) ராமநாதபுரத்தில் உள்ள செய்யதம்மாள் பள்ளி வளாகத்தில் கூட்டம் நடத்தப்படவுள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.