முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்
ராமநாதபுரத்தில் குடிநீர் திட்டப் பணிகளை மார்ச் இறுதிக்குள் முடிக்க அறிவுறுத்தல்
By DIN | Published On : 28th February 2019 07:56 AM | Last Updated : 28th February 2019 07:56 AM | அ+அ அ- |

ராமநாதபுரம் மாவட்டத்தில் கோடைகால குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்கும் வகையில் செயல்படுத்தி வரும் புதிய குடிநீர் திட்டப் பணிகளை மார்ச் இறுதிக்குள் முடிக்க வேண்டுமென மாவட்ட கணிப்பாய்வு அலுவலரும், தமிழ்நாடு கைத்தறி மற்றும் கைவினைப் பொருள்கள் மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநருமான பி.சந்திரமோகன் அறிவுறுத்தியுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் கோடை காலத்தில் பொதுமக்களுக்கான குடிநீர் விநியோகத்தை உறுதி செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் பி. சந்திரமோகன் பேசியது:
மாவட்டத்தில் குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் காவிரி கூட்டுக்குடிநீர்த் திட்டத்தில் 37 மில்லியன் லிட்டர் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.
ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை மூலம் கிராமங்களுக்கு 32.57 மில்லியன் லிட்டர் தண்ணீரும், பேரூராட்சி நிர்வாகத்தின் மூலம் 7 பேரூராட்சிகளில் 4 மில்லியன் லிட்டர் தண்ணீரும் விநியோகிக்கப்படுகிறது.
புதிய குடிநீர் திட்டப் பணிகளை பொருத்தவரையில் 2018-19 ஆம் நிதியாண்டில் மொத்தம் ரூ.13.70 கோடி மதிப்பில் 503 குடிநீர் திட்டப் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. நகராட்சி நிர்வாகத்தின் மூலம் மொத்தம் ரூ.12.90 கோடி மதிப்பில் 372 புதிய குடிநீர் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. புதிதாக தொடங்கப்பட உள்ள இப்பணிகளை மார்ச் இறுதிக்குள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்றார்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சி.முத்துமாரி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் த.கெட்சி லீமா அமலினி, ஊராட்சிகளின் உதவி இயக்குநர் வீ.கேசவதாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.