திருவாடானை, திருப்பத்தூரில் வர்த்தக நிறுவனங்களில் ஆய்வு: தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் பறிமுதல்
By DIN | Published On : 05th January 2019 01:56 AM | Last Updated : 05th January 2019 01:56 AM | அ+அ அ- |

திருவாடானை ஒன்றியத்தில் வர்த்தக நிறுவனங்கள், உணவகங்கள் ஆகியவற்றில் அதிகாரிகள் வெள்ளிக்கிழமை ஆய்வு நடத்தி தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களை பறிமுதல் செய்தனர்.
திருவாடானை ஒன்றியத்துக்கு உள்பட்ட சி .கே. மங்கலம், பாண்டுகுடி, எஸ்.பி. பட்டிணம், மங்களக்குடி, வெள்ளையபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள வர்த்தக நிறுவனங்கள், உணவகங்கள், தேநீர் கடைகள், மீன் சந்தைகள், ஜவுளிக் கடைகள், பல்பொருள் அங்காடிகள் ஆகியவற்றில் வட்டார வளரச்சி அலுவலர் ரமேஷ் குமார் தலைமையில் அலுவலர்கள், ஊராட்சிப் பணியாளர்கள் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
இதில் கடைகளில் விற்பனைக்கு வைத்திருந்த நெகிழிப் பைகள், டம்ளர்கள் உள்ளிட்ட பொருள்களை பறிமுதல் செய்தனர். மேலும், இனி வரும் காலங்களில் நெகிழிப் பொருள்களைப் பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என கடை உரிமையாளர்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
இந்த ஆய்வின் போது துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவி, பழனிநாதன் மற்றும் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விஜி, சுபா, சங்கர், தாஸ், வன்மிகநாதன், ஊராட்சிச் செயலர்கள் திருவாடானை மீனாட்சி சுந்தரம், பாண்டுகுடி சண்முகநாதன் பி.கே.மங்கலம் அய்யப்பன் மற்றும் எஸ்.பி. பட்டிணம் மார்கண்டேயன் ஆகியோர் உடன் சென்றனர்.
திருப்பத்தூர்: திருப்பத்தூரில் வருவாய்த்துறையினரும் பேரூராட்சி ஊழியர்களும் நெகிழிப் பைகளை ஒழிக்க வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.
வருவாய்த்துறையினர் மற்றும் பேரூராட்சி ஊழியர்கள் சுமார் 25-க்கும் மேற்பட்டோர் வட்டாட்சியர் தங்கமணி மற்றும் செயல் அலுவலர் சண்முகம் தலைமையில் குழுக்களாக இணைந்து வணிக வளாக கடைகள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் கறிக்கடை, காய்கறிக் கடை, துணிக்கடை, உணவகங்கள் சாலையோரக் கடை ஆகியவற்றில் நெகிழி பயன்படுத்தப்படுகிறதா என ஆய்வு மேற்கொண்டனர். காவல்துறையினரும் இந்த ஆய்வில் ஈடுபட்டனர்.
பெரியகடை வீதி, பேருந்துநிலையம், வாணியன்கோயில் வீதி, சின்னக்கடை வீதி மற்றும் மதுரைரோடு பகுதிகளில் உள்ள கடைகள் அனைத்திலும் இக்குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் பூக்கடைகளில் நெகிழிக்கு மாற்றாகப் பயன்படுத்திய மெழுகுப் பைகளும் கைப்பற்றப்பட்டன.
இந்த ஆய்வில், மண்டல துணை வட்டாட்சியர் சுரேஷ், துப்புரவு மேற்பார்வையாளர்கள் மோகன், கவிதா, நகர் காவல் ஆய்வாளர் முருகேசன், வரித்தண்டலர்கள் மாலிக், ருத்ராபதி மற்றும் திடக்கழிவு பரப்புரையாளர்கள் மற்றும் பேரூராட்சிப் பணியாளர்கள் உள்ளிட்டோர் ஈடுபட்டனர்.