ராமநாதபுரம் மாவட்டத்தில் ஓராண்டில் மணல் திருட்டு இரு மடங்காக அதிகரிப்பு

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டை விட  2018 இல் மணல் திருட்டு  இருமடங்கு அதிகரித்துள்ளது. 

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டை விட  2018 இல் மணல் திருட்டு  இருமடங்கு அதிகரித்துள்ளது. 
ராமநாதபுரம் மாவட்டத்தில் விதியை மீறி கண்மாய்கள், ஓடைகள் மற்றும் சிற்றாறுகள், விவசாய நிலங்களில் மணல் திருட்டு அதிகரித்துள்ளது. திருவாடானை, முதுகுளத்தூர், கடலாடி பகுதிகளில் அதிகளவில் மணல் திருட்டு நடந்துள்ளது.  மணல் திருட்டைத் தடுக்க கனிமவளத்துறையினரும், வருவாய்த்துறையினரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபடவேண்டும். ஆனால், அதிகாரிகள்கண்டு கொள்ளாததால் மணல் திருட்டு அதிகரித்ததாகக் கூறப்படுகிறது.
மேலும், அந்தந்தப் பகுதிகளில் உள்ள காவல்துறையினரும் மணல் திருட்டை கண்டுகொள்ளாமலிருந்ததாகப் புகார் எழுந்தது. காவல் துணைக் கண்காணிப்பாளர் அளவிலான அதிகாரிகள் மணல் திருட்டில் ஈடுபடுவோருக்கு சாதகமாக நடந்ததாகவும் புகார்கள் எழுந்தன.
 மணல் திருட்டில் ஈடுபடுவோர் மீது கோட்டாட்சியர் அபராதம் விதிப்பது, காவல்துறை வழக்குப் பதிவது என இரு வழிகளில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அபராதம் எனில் ரூ.25 ஆயிரம் விதிப்பதால், அதை எளிதில் கட்டிவிடுகின்றனர். பின்னர் மீண்டும் மணல் திருட்டில் ஈடுபடுகின்றனர். 
தொடர்ந்து மணல் திருட்டில் ஈடுபடுவோர் மீது காவல்துறை 379 பிரிவின் கீழ் வழக்குப் பதிந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கலாம். இதுபோன்ற நடவடிக்கைக்கு  கிராம நிர்வாக அலுவலர்களின் புகார் அவசியம். ஆனால், பெரும்பாலான கிராம நிர்வாக அலுவலர்கள் புகார் அளிப்பதில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த டிசம்பரில் சாயல்குடி பகுதியில் மணல் திருட்டை தடுக்கச் சென்ற வட்டாட்சியரை கொல்ல முயற்சி நடந்ததாகவும் புகார் எழுந்தது. அதன்பின்னர் மணல் கடத்தல் தொடர்பாக அதிகமாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.  மணல் கடத்தல் தொடர்பாக  காவல்துறை சார்பில் கடந்த 2017 ஆம் ஆண்டு 210 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதன்பேரில் 381 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 304 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கடந்த 2018 ஆம் ஆண்டில் மட்டும் ராமநாதபுரம் மாவட்டத்தில் மணல் கடத்தல் புகார் அடிப்படையில் 441 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதனடிப்படையில் 727 பேர் கைது செய்யப்பட்டு, 621 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவை அனைத்தும் கடந்த நவம்பர்,  டிசம்பரில் அதிக அளவில் பதிவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.  
 மணல் திருட்டில் ஈடுபட்டோரில் 60 சதவிகிதம் பேர் கோட்டாட்சியரிடம் அபராதம் கட்டி சென்று விட்டதாகவும், 40 சதவிகிதம் பேரே காவல்துறை வழக்குப் பதிவுக்கு உள்ளாகி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கைதானவர்களில்  ஒருவர் மீது மட்டுமே குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 
 மணல் கடத்தல் வழக்குகள் அதிகம் பதிவு செய்யப்பட்டது குறித்து காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ்மீனா கூறியது: காவல்துறை சட்டம், ஒழுங்கை பராமரித்தல், குற்றச் சம்பவங்களை தடுத்தல் ஆகிய பணிகளில் தீவிரம் காட்டுவதுடன், சமூகத்தின் முக்கிய அம்சமான மணல் உள்ளிட்ட கனிம வளங்களைக் காக்கும் வகையில் மணல் கடத்தலில் ஈடுபட்டோர் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுத்துள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com