சுடச்சுட

  


  ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் கல்வி நிறுவனங்களில் சனிக்கிழமை பொங்கல் திருவிழா நடைபெற்றது.
  ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தின் முன்பு அலுவலர்கள், பணியாளர்கள் சார்பில் சனிக்கிழமை காலை பொங்கல் விழா நடைபெற்றது. இரு வெண்கலப் பானைகளில் பொங்கலிடப்பட்டு, பூஜைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பணியாளர்கள் கலந்துகொண்டனர். 
  பள்ளி,கல்லூரி: கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கல்லூரித் தலைவர் சதக்குத்தம்பி நினைவு தமிழ் மன்றம் சார்பில் கலைப் பண்பாட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் ச. நு. ரஜபுதீன் தலைமை வகித்தார். போட்டிகளில் வென்ற மாணவ மாணவியருக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. பேராசிரியர் பழனி நகைச்சுவைச் சொற்பொழிவாற்றினார். முகம்மது சதக் பொறியியல் கல்லூரி பேராசிரியர் து.முகம்மது ஜஹபர் வாழ்த்துரை வழங்கினார்.
  ராமநாதபுரத்தில் உள்ள டி.டி.விநாயகம் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 
  கீழக்கரை நகராட்சியில்..: கீழக்கரை நகராட்சியில் சமத்துவ பொங்கல் விழா சனிக்கிழமை நடைபெற்றது. இதில் நகராட்சி ஆணையாளர் தனலட்சுமி, சுகாதாரத்துறை ஆய்வாளர் பூபதி, இளநிலை உதவியாளர் சரவணன் மற்றும் நகராட்சி ஊழியர்கள் கலந்துகொண்டனர். இதில் இரண்டு பானைகளில் பொங்கல் வைத்து அனைவருக்கும் வழங்கி கொண்டாடினர்.
  கமுதி: கமுதி வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் சிக்கந்தர் பபிதா தலைமையில் சனிக்கிழமை பொங்கல் வைத்து, பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்தும், துணிப்பைகளை பயன்படுத்துவது குறித்து உறுதிமொழி ஏற்றுகொண்டனர். இவ்விழாவில் துணை வட்டாட்சியர்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், அலுவலக பணியாளர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர். 
  கமுதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆணையாளர் தங்கபாண்டியன் தலைமையிலும், (கிராம ஊராட்சிகள்) ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் வீரராகவன் முன்னிலையிலும் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடபட்டது. துணி பைகளை பயன்படுத்தி, கதர் ஆடைகளை பயன்படுத்த உறுதிமொழி ஏற்றனர். 
  கமுதி பேரூராட்சியில் செயல் அலுவலர் ரா.இளவரசி தலைமையில் சமத்துவ பொங்கல் வைக்கபட்டு, பிளாஸ்டிக் பொருள்களை, தவிர்ப்போம் என, பணியாளர்கள் உறுதிமொழி ஏற்றனர்.
  பேரையூர் அருகே இ.வேப்பங்குளம் தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியர் விஜி தலைமையிலும் கமுதி கலாவிருத்தி மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் எம்.ஜெரினா பேகம் தலைமையிலும் கமுதி ஷத்திரிய நாடார் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி நிர்வாகிகள் தலைமையிலும் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. மாணவர்களுக்கு பொங்கல் வழங்கி, பிளாஸ்டிக் விழிப்புணர்வு குறித்து உறுதி மொழி எடுத்தனர். கமுதி அடுத்துள்ள நந்திசேரி அருகே கமுதி-அபிராமம் சாலையில் அமைந்துள்ள புனித ஜேம்ஸ் மெட்ரிக்குலேசன் பள்ளியில் தலைமை ஆசிரியர் ரெஜி தலைமையில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. 
  முதுகுளத்தூர்,கடலாடி பகுதி பள்ளி கல்லூரிகளில்...:கடலாடி அருகே உள்ள நரசிங்கக் கூட்டம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கடலாடி வட்டார தலைவர் வி.முனியசாமி தலைமையில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. 
  முதுகுளத்தூர் சோனை மீனாள் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் கல்லூரி முதல்வர் எஸ்.கோவிந்தராஜன் தலைமையிலும் முதுகுளத்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கல்லூரி முதல்வர் ரோம் ரூத் ஜெஸிபா தலைமையிலும் முதுகுளத்தூர் ஸ்ரீ கண்ணா மெட்ரிக்குலேசன் பள்ளியில் பள்ளி நிறுவனர் காந்திராஜன் தலைமையிலும் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. 
  மேலும் முதுகுளத்தூர் அருகே காத்தாகுளம் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் பள்ளித் தலைமை ஆசிரியர் கு.பாண்டியன் தலைமையிலும், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளித்தலைமை ஆசிரியை விக்டோரிய ராணி தலைமையிலும் எம்.தூரி அரசு தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியர் காளிமுத்து தலைமையிலும் சாயல்குடி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் பொங்கல் விழாக்கள் நடைபெற்றன.
  ராமநாதபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. இதில், அலுவலக அமைச்சுப் பணியாளர்கள், காவல் துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் பாரம்பரிய உடையான வேட்டி, சேலை அணிந்து வந்திருந்தனர். மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ் மீனா, கூடுதல் கண்காணிப்பாளர் கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
  ராமநாதபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் உள்ளிட்ட பெரும்பாலான அரசு அலுவலகங்களிலும், கல்வி நிலையங்களிலும் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
  பேரையூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில், வட்டாரத் தலைமை மருத்துவ அதிகாரி நாகரஞ்சித் தலைமையில் வெள்ளிக்கிழமை சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது. பிளாஸ்டிக் உபயோகத்தை தவிர்த்து, மாசில்லா பொங்கலை கொண்டாட ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள், பணியாளர்கள், செவிலியர்கள், பகுதி சுகாதாரப் பணியாளர்கள் அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். 
  கமுதி கோட்டைமேடு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவுக் கல்லூரியில் மாணவ, மாணவிகள் சார்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவுக்கு, கல்லூரி முதல்வர் அருணாச்சலம் தலைமை வகித்தார். கல்லூரி வளாகத்தில் மாணவிகள் பொங்கல் வைத்து சிறப்பு பூஜைகள் செய்தனர்.
  ராமேசுவரம்: ராமேசுவரம் நகராட்சிப் பணியாளர்கள் ஒன்றிணைந்து வியாழக்கிழமை சமத்துவப் பொங்கல் விழாவை கொண்டாடினர். இதில், நகராட்சி ஆணையர் வீரமுத்துக்குமார், பொறியாளர் அய்யனார், மேலாளர் (பொறுப்பு) உதயகுமார் 
  மற்றும் நகராட்சி அலுவலகப் பணியாளர்கள், ஊழியர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai