ராமநாதபுரம் மாவட்டத்தில் 207 கிராமங்களில் பொங்கல் விளையாட்டுப் போட்டிகள்

ராமநாதபுரம் மாவட்டத்தில் மாட்டுப் பொங்கலையொட்டி புதன்கிழமை 207 க்கும் மேற்பட்ட கிராமங்களில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசளிக்கப்பட்டன.

ராமநாதபுரம் மாவட்டத்தில் மாட்டுப் பொங்கலையொட்டி புதன்கிழமை 207 க்கும் மேற்பட்ட கிராமங்களில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசளிக்கப்பட்டன.
பொங்கலையொட்டி செவ்வாய்க்கிழமை ராமநாதபுரம் நகரில் சிவன், வழிவிடுமுருகன் மற்றும் திருப்புல்லாணி பெருமாள், தேவிபட்டிணம், சேதுக்கரை, நயினார் கோயில் உள்ளிட்ட கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. 
கடற்கரையோர மக்கள் படகுகளுக்கு காப்புக் கட்டியும், கடலில் பொங்கல் படைத்தும் பூஜை நடத்தினர். புதன்கிழமை மாட்டுப் பொங்கலையொட்டி காளைகள் உள்ளிட்ட கால்நடைகளுக்கு அலங்காரம் செய்து விழாவைக் கொண்டாடினர். 
காலையில் மாட்டுப் பொங்கல் முடிந்த நிலையில், சமூக அமைப்புகள், அரசியல் கட்சிகள் சார்பில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.  கபடி, சிலம்பம், ஓட்டப்பந்தயம், பானை உடைத்தல், இளவட்டக்கல் தூக்குதல், சாக்குகளை காலில் கட்டி ஓடுதல், கையில் தண்ணீரை வைத்து சிந்தாமல் ஓடுதல், சிறிய பாட்டில்களில் தண்ணீரை சிந்தாமல் நிரப்புதல், தீப்பந்த சிலம்பாட்டம், வாள் சண்டை என பல போட்டிகள் நடத்தப்பட்டன.
 மேலும், இளைஞர்களுக்கு இரு செங்கல்லைக் கொடுத்து அதை கால்களின் பாதங்களில் வைத்து அதை செருப்பு போல அணிந்து இழுத்து நடந்து செல்லும் தூரம் கணக்கிடப்பட்டது. 
ராமநாதபுரம் வழுதூர் பகுதியில் உள்ள அருளொளி விநாயகர் கோயிலில் மாட்டுப் பொங்கலை முன்னிட்டு புதன்கிழமை காலை இளைஞர், சிறுவர், சிறுமிகளுக்கான 100 மீட்டர், 50 மீட்டர் செங்கலில் நடந்துசெல்லும் போட்டிகளும், சைக்கிள் ஓட்டுதல், யானைப் பொம்மைக்கு கண் பொருத்தும் போட்டியும் நடத்தப்பட்டன. பரிசளிப்பு நிகழ்ச்சியில் நிர்வாகிகள் மோகன், ராஜா, தினகரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 
ராமநாதபுரம் நகராட்சி, ஊராட்சிப் பகுதிகளில் 110 இடங்களிலும், பரமக்குடிப் பகுதிகளில் 34 இடங்களிலும், கமுதி பகுதியில் 7, ராமேசுவரத்தில் 4, கீழக்கரைப் பகுதியில் 33, திருவாடானை பகுதியில் 11, முதுகுளத்தூர் பகுதியில் 8 என மொத்தம் 207 இடங்களில் காவல்துறை அனுமதி பெற்று பொங்கல் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.
ராமேசுவரம்: ராமேசுவரம் ராமகிருஷ்ணபுரம் விவேகாந்தா குடில் சார்பில் பொங்கல் மற்றும் விளையாட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது. 
இந்த நிகழ்ச்சியில் குழந்தைகளுக்கு விளையாட்டு, பேச்சுப் போட்டி, நடனப் போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சுவாமி பிரனவானந்தா பரிசுகளை வழங்கினார். 
இந்நிகழ்ச்சியில் கிராமத் தலைவர் நம்பு, நகர் மன்ற முன்னாள் உறுப்பினர் குமரேசன் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் வேடராஜன் நன்றி கூறினார்.
திருவாடானை: திருவாடானை தாலுகாவில் வழக்கம் உற்சாகமாக பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது.இந்நிலையில் புதன்கிழமை கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக மாட்டு பொங்கல் கொண்டாடப்பட்டது. ஆடு, மாடு, கோழிகளை குளிப்பாட்டி பொட்டு வைத்து அலங்காரம் செய்து, ஊரின் பொது இடத்தில் அனைவரும் பொங்கல் வைத்து கொண்டாடினர். பின்னர் மஞ்சுவிரட்டு  நடைபெற்றது. குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டிகளும், ஆண்களுக்கு பானை உடைத்தல் போட்டியும், பெண்களுக்கு கோலப் போட்டியும் நடைபெற்றது.
முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் அருகே நல்லூர் கிராமத்தில் பொங்கலையொட்டி நேதாஜி பாய்ஸ் நடத்தும் 10ஆம் ஆண்டு கிரிக்கெட் போட்டி புதன்கிழமை நடைபெற்றது.
ராமநாதபுரம், பரமக்குடி, முதுகுளத்தூர், கமுதி உள்பட வெளியூர்களில் இருந்து 35 க்கும் மேற்பட்ட  அணிகள் கலந்து கொண்டன. போட்டியில் கீழப்பனைகுளம் அணி முதல் பரிசும், நல்லூர் அணி இரண்டாம் பரிசும், சிறுமணியேந்தல் அணி மூன்றாம் பரிசும், கமுதி அணி நான்காம் பரிசும் பெற்றன. போட்டியில் வெற்றி பெற்ற அணியினருக்கு கோப்பை மற்றும் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது.
போட்டிக்கான ஏற்பாடுகளை நல்லூர் கிராமத்தை சேர்ந்த நேதாஜி நற்பணி மன்ற இளைஞர்கள் செய்திருந்தனர்.
பரமக்குடி: பரமக்குடி பாண்டியன் தெரு இளைஞர் சங்கம் சார்பில் செவ்வாய்க்கிழமை பொங்கல் விழா மற்றும் பட்டிமன்றம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு அமமுக இளைஞரணி செயலர் சந்திரசேகர் தலைமை வகித்தார். ஜி.சிகாமணி, ஜெ.காந்தி, க.நாகேசுவரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாண்டியன் தெரு இளைஞரணி தலைவர் கே.செந்தில்நாதன் வரவேற்றார்.
சமத்துவப் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிக்குப் பிறகு மாலையில் நடைபெற்ற விடுதலைக்குப் பின் நாடு முன்னேறி உள்ளது என்ற தலைப்பில் தமிழாசிரியர் கூ.செட்டியப்பன், முனைவர் ம.அர்ச்சுணன், கு.ராமசாமி ஆகியோர் பேசினர். நாடு முன்னேறவில்லை என்ற தலைப்பில் வழக்குரைஞர் சி.பசுமலை, ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் செ.சந்தியாகு, ஆர்.செல்வக்குமார் ஆகியோர் பேசினர். 
இப்பட்டிமன்றத்தின் நடுவராக சமூக ஆர்வலர் சை.செளந்தரபாண்டியன் விடுதலைக்குப் பின் நாட்டில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஆனால் எதிர்பார்த்த முன்னேற்றம் இல்லை என தீர்ப்பளித்தார். 
நிகழ்ச்சியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலர் வேந்தை சிவா, சங்க நிர்வாகிகள் கே.கார்த்திக், கே.கபிலன், காளிதாஸ், வினோத்செல்வம் உள்பட பலர் கலந்துகொண்டனர். சுப்பிரமணியன் நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com